அற்புதமான பாடல்கள் மூலம் நம்மிடையே உலவி வருகிறார் ஜென்சி.
நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு மட்டும் தான் ரசிகர்கள் என்று இல்லை. இசையமைப்பாளர்கள், புகைப்படக் காரர்கள், பாடகர்கள், பாடகிகளுக்கும் ரசிகர்கள் உண்டு.
இன்றும் மறைந்த TMS மற்றும் SPB அவர்களுக்கு வெறித்தனமான ரசிகர்கள் உண்டு. இரவில் உறங்குவதற்கு இவர்கள் பாடல்கள் கேட்டால் தான் உறக்கம் வருகிறது என்று சொல்லும் ரசிகர்கள் ஏராளம்.
அந்தளவுக்கு அவர்கள் மறைந்தாலும் அவர்கள் பாடல்கள் மூலம் இன்றும் நம்மிடையே உலவி வருகின்றார்கள்.பாடகிகள் என்றாலே சுசிலா, ஜானகி, வாணி ஜெயராம் இவர்களுக்கு மத்தியில் நான்கு வருடங்களே திரை உலகில் வலம் வந்தாலும் 29 அற்புதமான பாடல்கள் மூலம் நம்மிடையே உலவி வருகிறார் திருமதி ஜென்சி அவர்கள்.
ஜென்சி ஓர் இசைக்குடும்பத்தில் பிறந்தவர் என்பதால் அவர் வாழ்வில் இசை மிக இளம் வயதிலேயே கைகூடியது.
தமிழ்த் திரையுலகுக்கு ஒரு புதிய பெண் குரலை அறிமுகப் படுத்த எண்ணியிருந்த இசையமைப்பாளர் இளையராஜா மலையாளத்தில் கிறித்தவப் பாடல்களைப் பாடிக்கொண்டிருந்த இவரைப் பற்றிக் கேள்விப்படவே, இவரைத் தாம் இசையமைத்துக் கொண்டிருந்த “திரிபுரசுந்தரி” என்ற படத்தில் “வானத்துப் பூங்கிளி” என்ற பாடலைப் பாட அறிமுகப் படுத்தினார்.
அதைத் தொடர்ந்து “முள்ளும் மலரும்”, “ப்ரியா போன்ற வெற்றிப்படங்களில் பாடினார். 1978 முதல் 1982 வரை பல வெற்றிப்படங்களில் பாடிக் கொண்டிருந்த இவர், திருமணத்துக்குப் பிறகு திரைப்படத் தொழிலைக் கைவிட்டுவிட்டுக் கிறித்தவச் சமயப் பாடல்களை மட்டும் பாடத் தொடங்கினார்.
தவிர்க்க முடியாத சில காரணங்களால், தற்போது திரைப்பாடல்கள் பாடுவதில் ஆர்வம் காட்டவில்லை. கேரளாவில் அவருடைய சொந்த ஊரில், இசை கற்றுக்கொடுக்கும் பள்ளி ஒன்று நடத்தி வருகிறார்.
அவருடைய 29 பாடல்களில் 27 பாடல்கள் இசையமைப்பாளர் இளையராஜா அவர்கள் இசையமைப்பில் உருவானவை. ஒரு பாடல் கங்கை அமரன் இசையமைப்பில், ஒரு பாடல் சங்கர் கணேஷ் அவர்கள் இசையமைப்பில் வெளி வந்தவை.
அந்த 29 பாடல்களையும் இன்றும் தவறாமல் கேட்டு வரும் ரசிகர்கள் அதிகம். இனிமையான குரல் என்பதை காட்டிலும் காந்த குரல் என்றே சொல்லலாம். அவருடைய பாடல்களை கண்களை மூடிக்கொண்டு கேட்டு ரசிக்கலாம்.
அவருடைய இனிமையான அற்புதமான பாடல்களில் ஒரு சில:
01. அடி பெண்ணே – முள்ளும் மலரும்
02. என் உயிர் நீ தானே – பிரியா
03. தம் தன நம் தன தாளம் வரும் – புதிய வார்ப்புகள்
04. இதயம் போகுதே – புதிய வார்ப்புகள்
05. ஆயிரம் மலர்களே – நிறம் மாறாத பூக்கள்
06. என் வானிலே – ஜானி
07. காதல் ஓவியம் – அலைகள் ஓய்வதில்லை
08. வாடி என் கப்பக்கிழங்கே – அலைகள் ஓய்வதில்லை