யார் இந்த வந்தியத்தேவன்?

பொன்னியின் செல்வனின் திரை வடிவத்தின் முதல் பாகம் திரைக்கு வந்து 25 நாட்களுக்கு மேலாகின்றன.

இளம் வயதினரை விட, முதியவர்கள் தான் அதிகம் திரையரங்கிற்குள் வந்து விரும்பி பார்க்கிறார்கள். அவர்களை பொன்னியின் செல்வன் என்ற புதினம் மூலம் ஏற்கனவே கல்கி அவர்கள் கட்டி போட்டுவிட்டதன் விளைவு தான் இது.

பொன்னியின் செல்வன் புதினத்தை பல முறை படித்தவன் என்ற முறையில் என்னுடைய பார்வையில் வந்தியத்தேவன் என்ற கதாபாத்திரத்தை பற்றி சில தகவல்கள்:

01. இந்த புதினம் முற்றிலும் இந்த இளைஞனை சுற்றி தான் வலம் வரும். அதாவது கல்கி இவன் மூலம் தான் கதை சொல்லுவார். சில சமயங்களில் இவன் இல்லாத காட்சிகளில் வேறு கதை சொல்லிவிட்டு வாசகர்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, அவனை எங்கேயாவது பிடித்து இழுத்துக்கொண்டு நம் முன் நிறுத்திவிடுவார். அப்போது பூங்குழலி முன்பு நின்று கொண்டு அசடு வழிந்து கொண்டு இருப்பான்;

அல்லது நந்தினி முன்பு நின்று கொண்டு அவளை பற்றி ஆராய்ந்து கொண்டு இருப்பான்; அல்லது மணிமேகலைக்கு தன் மேல் பிரியம் இருப்பதை கண்டு மகிழ்வதும் வருந்துவதுமாக இருப்பான். இந்த யுக்தி தான் வாசகர்களை கல்கியோடு இணைந்து பயணிக்கவைத்தது. இது போன்ற உணர்வு பூர்வமான,

மெய்ச்சிலிற்கும் காட்சிகளை, வாசகர்களையும் கற்பனை உலகத்தில் சிறகடித்து பறக்கவைக்கும் காட்சிகளை குறுகிய நேரமே காட்டப்படும் திரையில் காண்பது மிகவும் கடினம். அதற்கு பல பாகங்கள் வேண்டும். அல்லது வந்தியத்தேவன் என்ற திரைக்கதையாக கொண்டு வரலாம்.

02. வந்தியத்தேவன் வீரம், சோகம், இரக்கம், அன்பு, பாசம் போன்ற அத்தனை நேர்மறை உணர்வுகளையும் தன்னிடம் கொண்டவன். அவனுக்கு நாட்டை ஆள்வதில் விருப்பம் இல்லை. அவனுக்கு இலக்குகள் என்று ஒன்று இல்லை. மனம் போகின்ற போக்கில் ஊரை சுற்றி வர விரும்புபவன். இந்த குணங்களை பிரபதிபலிக்கும் ஒரு நடிகர் தான் இந்த கதாபாத்திரத்திற்கு வலு சேர்க்கக்கூடியவர். அந்த வகையில் கார்த்தி மிகவும் பொருத்தமான தேர்வு. கார்த்தி இயல்பாகவே இதுபோன்ற குணாதிசயங்களை கொண்டவர். பருத்திவீரனை நினைவு படுத்தினால், நமக்கு தெளிவாகும்.

03. குந்தைவையிடம் தன்னை அறியாமலே காதல் கொள்ளுவது; நந்தினியை பார்த்து அவள் அழகில் மெய் சிலிர்க்கும் போதே, தனது மன உணர்வுகளுக்கு கட்டுகள் விதித்து, ஒழுக்கத்தை காண்பிப்பது; மணிமேகலையிடம் மனம் செல்லும்போதே, அவள் ஏமாந்து விடக்கூடாதே என்ற பரிதாபம் கொள்ளுவது. நீரில் தத்தளிக்கும் அவளை காப்பாற்றுவது (இரண்டாம் பாகத்தில் காண்பிக்கப்படலாம்); பூங்குழலியின் இயற்கை வசீகரத்தில் மனதை இழந்து பிறகு சேந்தன் அமுதனை நினைத்து நினைத்து தேர்த்திக்கொள்ளுவது. இந்த வகையில் வந்தியத்தேவனுக்கு பெண்கள் மூலம் தாக்கம் தரும் பலவகை உணர்வுகளை கல்கி அற்புதமாக தந்திருப்பார். கல்கியின் புதினம் பாத்திரங்களை சார்ந்ததே. வந்தியத்தேவனை பற்றி கதை சொல்லும்போதே, அவனுடைய குணாதிசங்களுக்கு பங்கம் வராமல் சொல்லுவார்.

04. தன்னை நம்பி பொறுப்பை தரும் ஆதித்தனுக்கு கடைசிவரை விசுவாசியாக இருப்பது; எப்படியாவது குந்தவைக்கு வாக்கு தந்தவகையிலும், தன்னுடைய தோழன் என்ற வகையிலும், ஆதித்தனை மரணத்தின் பிடியில் இருந்து காப்பாற்ற முயற்சி செய்வது. தனக்கு எதிரியாக செயல்படும் கந்தமாறனைக்கூட, மரணத்தின் பிடியில் இருந்து காப்பாற்றுவது; பெரிய பழுவேட்டரையர், சிறிய பழுவேட்டரையர், நந்தினி – இவர்கள் செய்யும் சூழ்ச்சிகள் நடை பெறாமல் தடுப்பதற்கு தன்னால் முயன்ற காரியங்களை செய்வது. மதுராந்தகனை கூட காப்பாற்ற முயல்வது; பொன்னியின் செல்வனுக்கு உறுதுணையாக இருப்பது; ஆழ்வார்கடியானை பாதுகாத்து அவன் மூலம் ரகசியங்கள் அறிந்து துர் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க முயற்சி செய்வது. என்னதான் பாண்டியர்களின் கைக்கூலிகளாக இருந்தாலும், ரவிதாசன் போன்றவர்களிடம் இரக்கம் காட்டுவது. இப்படி பல கோணங்களில் வந்தியத்தேவனை பற்றி கதைகள் மூலம் கல்கி சொல்லியிருப்பார்.

05. ஆதித்தன் நந்தினியின் வேண்டுகோளை புறக்கணித்து பாண்டியனின் தலையை கொய்தது எந்தவகையிலும் வந்தியத்தேவனுக்கு ஏற்புடையதாக இல்லை. நந்தினியுடன் அவன் சந்திக்கும் நேரங்களில் அவனின் பேச்சுக்கள் இவற்றை வெளிப்படுத்தும். அவனை பொறுத்தவரையில் மனம் பேதலித்து பைத்தியமாக நடமாடும் ஆதித்தனை விட நந்தினி எவ்வளோவோ மேல். ஆனால் நண்பன் என்ற காரணத்தால் அவனையும் ஒருபுறம் தாங்கிக்கொண்டு, நந்தினியையும் கொலைப்பழியில் இருந்து காப்பாற்றத்துடிக்கும் வந்தியத்தேவனின் பங்கு தான் இரண்டாம் பாகத்தில் அதிகம்.

06. சொல்லப்போனால் “பொன்னியின் செல்வனின்” உண்மையான கதாநாயகன் வந்தியத்தேவன் தான். பிற்காலத்தில் ராஜ ராஜன் என்ற பெயருடன் வலம் வந்த பொன்னியின் செல்வனின் பெருமை சிதறிவிடக்கூடாதே என்றளவிலும் வந்தியத்தேவன் ஒரு இரண்டாம் நிலை கதாபாத்திரமாக கல்கி கொண்டு வந்திருப்பார். (அலுவலகங்களில் சில சமயங்களில் சில உதவியாளர்கள் மேலாளர்களை விட புத்திசாலித்தனமாகவும், சாதுர்யமாகவும் செயல்படுவார்கள். ஆனால் பெருமை மேலாளருக்கு சென்று விடும்)

இறுதியாக:
பொன்னியின் செல்வன் புதினம் படித்தவர்களுக்கு இது ஒரு நினைவூட்டல்; தெரிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு ஒரு தகவல். திரை படத்தில் மட்டும் பார்க்க விரும்புபவர்களுக்கு ஒரு சஸ்பென்ஸ்.

Leave A Reply

Your email address will not be published.