கோவை கார் வெடிப்பு வழக்கு – என்.ஐ.ஏவுக்கு மாற்ற முதலமைச்சர் பரிந்துரை!
கோவை, உக்கடம் பகுதியில் நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பான வழக்கின் விசாரணையை என்.ஐ.ஏ.வுக்கு மாற்ற முதலமைச்சர் பரிந்துரைத்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி அறிக்கையில், கோவையில் கடந்த 23ஆம் தேதி நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை குறித்து முதலமைச்சர் தலைமையில் இன்று தலைமை செயலகத்தில் விரிவாக ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆய்வு கூட்டத்தில், கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை குறித்தும், கோவையில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இது போன்ற சம்பவங்களின் விசாரணையில், மாநிலம் தாண்டிய பரிணாமங்களும், பன்னாட்டு தொடர்புகளும் இருக்க வாய்ப்புள்ளதால் இந்த வழக்கு விசாரணையை என்.ஐ.ஏவுக்கு மாற்றிட மத்திய அரசுக்கு முதலமைச்சர் பரிந்துரைத்தார்.
தொடர்ந்து, கோவை மாநகரின் பாதுகாப்பினை மேலும் வலுப்படுத்திட கரும்பு கடை, சுந்தராபுரம், கவுண்டம்பாளையம் ஆகிய 3 பகுதிகளில் புதிய காவல் நிலையங்களை உடனடியாக அமைக்க வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.