கர்நாடகத்தில் அசுத்தமான தண்ணீரை குடித்த இருவர் பலி: 40 பேர் மருத்துவமனையில் அனுமதி!
கர்நாடகத்தின் ஹோத்பேட் கிராமத்தில் அசுத்தமான தண்ணீரை குடித்த 2 பேர் பலியாகினர். 40-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாத்கிர் மாவட்டத்தின் ஷாஹாபுரா தாலுகாவில் உள்ள ஹோத்பேட் கிராமத்தில் இந்த சம்பவம் நடைபெற்றது. கிராமத்தில் உள்ள மக்கள் வாந்தி, பேதி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டுள்ளது. நிலைமையைக் கண்காணிக்க சுகாதார அதிகாரிகள் சம்பவ இடத்தில் முகாமிட்டுள்ளனர்.
காலரா நோய் பரவுமோ என அப்பகுதி மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. பழைய கிணற்றில் இருந்து குழாய் இணைப்புகள் மூலம் வீடுகளுக்கு தண்ணீர் வழங்கப்பட்டதை அடுத்து, இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உயிரிழந்தவர்கள் ஹொன்னப்ப கௌடா மற்றும் ஏரம்மா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். பழைய கிணற்றில் குடிநீர் விநியோகம் செய்வது குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்று தெரிவித்தனர்.
தண்ணீரின் மாதிரிகளை எடுத்து ஆய்வுக் கூடத்தில் பரிசோதனை செய்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த தண்ணீரை குடிநீருக்கு பயன்படுத்த முடியாது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகாரிகளுக்கு இது தெரியும், ஆனால் எதுவும் செய்யவில்லை என்று குடியிருப்பாளர் கூறியுள்ளனர்.
கிணற்று நீர் மற்றும் மேல்நிலைத் தொட்டியின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு, அவை குடிநீருக்குப் பயன்படுத்தப்படலாம் என முடிவு கிடைத்துள்ளதாக தாலுகா சுகாதார அலுவலர் ரமேஷா குட்டேதர ஷஹாபுரா தெரிவித்தார்.
அதிகாரிகள் சோதனை செய்து வரும் பைப் லைனில் தான் கோளாறு உள்ளது. குடிநீர் விநியோகம் செய்ய மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.