அணு ஆயுதப் போர் உருவாகும் அபாயம்…
உக்ரைன் மீது ரஷியா படையெடுப்பை தொடங்கி 8 மாதங்கள் கடந்துள்ளது. உக்ரைனின் முக்கிய பகுதிகளை கைப்பற்றிய ரஷியா, தொடர்ந்து தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் போர் நிறுத்தம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இப்போதைக்கு இல்லை. இதற்கிடையே உக்ரைன் அணுமின் நிலையங்களில் அணுக் கழிவுகளை பயன்படுத்தி நாசகார ஆயுதங்களை அந்த நாடு தயாரித்து வருவதாகவும், அதன் மூலம் தாக்குதலை நடத்த திட்டமிடுவதாகவும் ரஷியா குற்றம்சாட்டியது.
இந்த குற்றச்சாட்டை உக்ரைன் மறுத்துள்ளது. அத்துடன் ரஷியாதான் அப்படிப்பட்ட நாசகாச ஆயுதங்களை தயாரிப்பதாக எதிர்குற்றச்சாட்டை முன்வைத்தது. இந்த பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில் உக்ரைன் படைகள் அணு ஆயுத தாக்குதல் நடத்தினால், அதற்கு தக்க பதிலடி தரும் வகையில் ரஷிய சிறப்பு படைகள் பயிற்சியை தொடங்கின.
நவீன ஏவுகணைகளை செலுத்தி ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றன. அணுசக்தி திறன் கொண்ட படைகளின் இந்த ஒத்திகையை ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இன்று காணொலி காட்சி வாயிலாக ஆய்வு செய்தார். தரை, கடல் மற்றும் வான் பாதுகாப்பு மற்றும் தடுப்புப் படைகள் பயிற்சியில் ஈடுபட்டதாகவும், பாலிஸ்டிக் மற்றும் கப்பல் ஏவுகணைகள் பரிசோதனை செய்யப்பட்டதாகவும் கிரெம்ளின் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆர்க்டிக் பகுதியில் உள்ள பேரண்ட்ஸ் கடலில் இருந்து சினேவா பாலிஸ்டிக் ஏவுகணையை செலுத்த, நீர்மூழ்கிக் கப்பல் குழு தயாராகும் காட்சிகளை ரஷிய அரசு ஊடகம் வெளியிட்டது. கிழக்கு பகுதியில் உள்ள கம்சட்கா தீபகற்பத்தில் இருந்து ஏவுகணைகளை சோதனை செய்வதும் இந்த பயிற்சியில் அடங்கும். ரஷிய படைகளின் இந்த ஒத்திகையின்மூலம், உக்ரைன் போர் அணு ஆயுத மோதலாக மாறக்கூடும் என அஞ்சப்படுகிறது.