ஐக்கிய மக்கள் சக்தியை ஆட்சியில் அமர்த்த தயார் நிலையில் மக்கள்! – சஜித் சூளுரை.
“மாற்று அரசாக ஐக்கிய மக்கள் சக்தி அரசை நிறுவ நாட்டு மக்கள் எந்நேரமும் தயாராகவே உள்ளனர்.”
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
மருந்தக உரிமையாளர்கள் சங்கம், மருந்தக உதவியாளர் சங்கம், அவர்களின் தொழில்முயற்சியாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் பலர் கலந்துகொண்ட தேசிய மக்கள் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் நேற்று கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கூடியது. இதில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மருந்துப் பற்றாக்குறைக்கு முக்கியக் காரணம் டொலர் தட்டுப்பாடும், இறக்குமதி முறையின் பிரச்சினையும் ஆகும். பண்டோரா பத்திரங்களில் குறிப்பிட்டுள்ளபடி நாடு இழந்த பில்லியன் கணக்கான டொலர்களை கொண்டு வருவதே இந்த டொலர் பிரச்சினையைத் தீர்க்க சிறந்த தீர்வாகும். அவ்வாறு இல்லாமல் சீனா, இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளிடமிருந்து கடன் பெறவதல்ல.
இதன் மூலம் மருந்துத் தட்டுப்பாடு மட்டுமின்றி, நாட்டின் டொலர் நெருக்கடிக்கு தீர்வு கிட்டும். இது தனிநபர்களைக் குறிவைப்பதன் மூலம் அன்றி, மாறாக தவறு செய்த மற்றும் திருடிய, கொள்ளையடித்த, அரச வளங்கள் மற்றும் அரச சொத்துக்களைப் பெற்றுக்கொள்வதை இலக்காகக் கொண்டு மேற்கொள்ள வேண்டும். இந்தப் பணமும் சொத்துக்களும் 220 இலட்சம் பொதுமக்களின் சொத்து ஆகும்.
ஆனால், தற்போதைய அரசு அந்த வழியைப் பின்பற்றுமா என்பது ஒரு பிரச்சினைக்குரிய விடயம் என்றாலும், எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தி அரசின் கீழ், திருடப்பட்ட பணம் அனைத்தும் தெளிவான, வெளிப்படத்தன்மையுடனும் பொறுப்புடனும் தொடர்புடைய அனைத்து வளங்களும் மீட்கப்படும்.
நாட்டில் தற்போது நிலவும் மருந்துப் பற்றாக்குறையைத் தீர்க்க எதிர்க்கட்சியில் இருந்தும் பெரிய வேலைத்திட்டம் செயற்படுத்தப்படுகின்றது. இதன் கீழ் இதுவரை 165 மில்லியன் பெறுமதியான வைத்தியசாலை உபகரணங்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன” – என்றார்.