பருத்தித்துறை இ.போ.ச. சாலையில் இரு தரப்பினர் இடையே கைகலப்பு!
பருத்தித்துறை இ.போ.ச. சாலையில் கைகலப்பில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 11 பேர் கைது செய்யப்பட்டனர் என்று பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை இ.போ.ச. சாலை முகாமையாளர் கொழும்பில் இருந்து நியமிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது நியமனம் தொடர்பில் சாலை ஊழியர்களிடையே முரண்பட்ட நிலைமையே காணப்படுகின்றது.
முகாமையாளருக்குச் சார்பாக ஒரு தரப்பும், வேறோருவரை நியமிக்க வேண்டும் என்று இன்னொரு தரப்பும் செயற்படுவதாலேயே இந்த நிலைமை காணப்படுகின்றது.
இந்தக் குழப்ப நிலைமையால் கோண்டாவில் பிராந்திய பணிமனையில் கையொப்பமிடுவதற்கும், அங்கிருந்த பணியாற்றவும் முகாமையாளருக்குப் பணிக்கப்பட்டிருந்தது. இருந்தபோதும் பருத்தித்துறை இ.போ.ச. சாலையில் இந்தப் பிரச்சினை தொடர்ந்த வண்ணமே இருந்தது.
இதன் தொடர்ச்சியாக முகாமையாளருக்கு ஆதரவான தரப்பு அண்மையில் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. எனினும், மற்றைய தரப்பு ஆதரவு வழங்கவில்லை.
இந்தப் பிரச்சினையால் கடந்த 20 ஆம் திகதி காலை 4 மணிக்கு சேவையில் ஈடுபட்ட திருகோணமலை – பருத்தித்துறை பஸ் பணிப்புறக்கணிப்பு என்று தெரிவிக்கப்பட்டு மறிக்கப்பட்டது. ஆயினும், அதன்பின்னர் பணிப்புறக்கணிப்புக்கு ஆதரவளிக்க மாட்டோம் என்று தெரிவித்து ஏனைய பஸ் சேவைகள் நடைபெற்றன.
திருகோணமலை – பருத்தித்துறை பஸ் சேவை மறிக்கப்பட்டால் இ.போ.ச. சாலைக்கு சுமார் ஒரு இலட்சம் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகின்றது.
இந்தநிலைமையில் நேற்று முகாமையாளர், பருத்தித்துறை இ.போ.ச. டிப்போவுக்குச் சென்றுள்ளார். அவரைக் கோண்டாவில் பணிமனையிலேயே பணியாற்றுமாறு பணிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் அங்கு வந்தமை தொடர்பாக அங்கிருந்தவர்கள் கேள்வி எழுப்பியதை அடுத்து வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. அந்த வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியுள்ளது.
பருத்தித்துறை பொலிஸ் நிலைத்தில் இரு தரப்பினராலும் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
முறைப்பாட்டுக்கு அமைய முகாமையாளர் தரப்பில் முகாமையாளர் உட்பட 4 பேரும், மற்றைய தரப்பில் 7 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். பொலிஸ் நிலையத்தில் இரு தரப்பினரையும் சமரசம் செய்ய முயன்றபோதும் அது பயனிக்கவில்லை.
அதையடுத்து அவர்கள் மீது 3 குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்குப் பதிவு செய்த பருத்தித்துறை பொலிஸார், அவர்களை பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் தலா 10 ஆயிரம் ரூபா காசுப் பிணையிலும், ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான ஆள்பிணையிலும் செல்ல அவர்களை அனுமதித்ததுடன், கடும் எச்சரிக்கையும் செய்தது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த வடபிராந்திய இ.போ.ச. முகாமையாளர் குணபாலசிங்கம்,
“சாலையில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைமையை அடுத்து அங்கு செல்ல வேண்டாம் என்று முகாமையாளருக்குப் பணிக்கப்பட்டிருந்தது. எனினும், அவர் கொழும்பில் அதிகாரிகளுடன் தொலைபேசியில் உரையாடிவிட்டு அங்கு சென்றுள்ளார்.
உரிய அதிகாரிகளின் அனுமதி பெற்றுச் செல்ல வேண்டும் என்று கொழும்பில் இருந்து அவருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தபோதும், அதை அவர் கடைப்பிடிக்கவில்லை. அதனாலேயே அங்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. உரிய அனுமதி இல்லாது அவர் இனிமேல் அங்கு செல்லக்கூடாது என்று மீண்டும் எழுத்துமூலம் அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது” – என்றார்.