20-க்கும் மேற்பட்ட பெண்களிடம் பாலியல் அத்துமீறல் – ஆதாரங்களுடன் சிக்கிய முன்னாள் தலைமை செயலாளர்

தனது பதவி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து வேலை வங்கித் தருவதாகக் கூறி 20க்கும் மேற்பட்ட பெண்களிடம் பாலியல் அத்துமீறல் ஈடுபட்ட புகாரில் முன்னாள் தலைமை செயலாளர் சிக்கியுள்ளார். அந்தமான் நிக்கோபர் தீவுகளின் தலைமை செயலாளராக இருந்தவர் ஜிதேந்திரா நரேன். இவர் மீது இளம் பெண் ஒருவர் சமீபத்தில் பாலியல் புகார் அளித்தார். ஜிதேந்திரா நரேன் தனக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி வீட்டிற்கு அழைத்து பாலியல் வன்புணர்வு செய்ததாக அந்த 21 வயது இளம்பெண் அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தமானில் உள்ள தலைமை செயலாளர் அரசு குடியிருப்பில் தன்னை தனியே அழைத்து தலைமை செயலாளராக இருந்த ஜிதேந்திராவும், தொழிலாளர் ஆணையர் ஆர்எல் ரிஷி ஆகியோர் தன்னை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்ததாக அந்த பெண் தனது புகாரில் தெரிவித்திருந்தார்.

இந்த புகாரை அடுத்து கடந்த அக்டோபர் 17ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் குற்றச்சாட்டுக்கு ஆளான ஜிதேந்திரவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த புகார் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையில் தற்போது அதிர்ச்சிக்குரிய தகவல் வெளியாகியுள்ளது. ஜிதேந்திரா நரேன், தனது பதவி காலத்தில் 20க்கும் மேற்பட்ட பெண்களை வேலை வாங்கித்தருவதாகக் கூறி தனது வீட்டிற்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்துள்ளது.

ஜிதேந்திரா நரேனும், ரிஷியும் இணைந்து இந்த குற்றச் செயலில் ஈடுபட்டதற்கான செல்போன் உரையாடல் பதிவுகள், செல்போன் டவர் ஆதாரங்களை சிறப்பு புலனாய்வு குழு திரட்டியுள்ளது. மேலும், இரு மாதங்களுக்கு முன்னர் ஜிதேந்திரா வீட்டின் சிசிடிவி காட்சி பதிவுகள் ஹார்ட் டிஸ்கில் இருந்து அழிக்கப்பட்டுள்ளன. முக்கிய ஆதரங்களை திட்டமிட்டே அழித்தது சந்தேகத்தை மேலும் வலுப்படுத்திய நிலையில், தலைமை செயலாளரின் கீழ் வேலை பார்த்தவர்கள், அவர் வீட்டில் பணிபுரிந்தவர்களிடமும் தீவிர விசாரணை நடைபெறுகிறது.

Leave A Reply

Your email address will not be published.