கோவை கார் வெடிப்பு… என்ஐஏ விசாரணைக்கு மாற்ற மத்திய அரசு உத்தரவு
கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கை என்ஐஏ விசாரணைக்கு மாற்ற அதிகாரப்பூர்வ உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.
கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பேர் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை அடுத்த மாதம் 8ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் அடுத்தடுத்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தேசிய புலனாய்வு முகமை டிஐஜி வந்தனா மற்றும் எஸ்பி ஸ்ரீஜித் ஆகியோர் கோவையில் முகாமிட்டுள்ளனர். தொடர்ந்து, கோவையில் உள்ள காவல்துறை உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து வழக்கின் விபரங்கள் குறித்து கேட்டறிந்து வருகின்றனர்.
இந்நிலையில், கார் வெடிப்பு வழக்கில் 6வது நபர் கைதான நிலையில் இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நேரடியாக விசாரணை மேற்கொள்ள வழக்கை என்ஐஏ விசாணைக்கு மாற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே கார் வெடிப்பு வழக்கை என்ஐஏ விசாரணைக்கு மாற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பரிந்துரை செய்திருந்தார். மேலும் என்ஐஏ அதிகாரிகள் ஏற்கனவே கோவை வந்துள்ள நிலையில் அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கார் வெடிப்பு வழக்கை என்ஐஏ நேரடியாக விசாரிக்க உள்ளது.
இந்நிலையில், கோவையில் என்ஐஏ அதிகாரிகளிடம் டிஜிபி சைலேந்திரபாபு இன்று ஆலோசனை நடத்தினார். மேலும் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக நெல்லையில் முகமது உசேன் லெப்பை என்பவரிடம் நெல்லை மேலப்பளையம் காவல்நிலையத்தில் வைத்து நெல்லை மாநகர துணை ஆணையர் அனிதா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.