அரசின் வாக்குறுதிகளை நம்பி ஏமாந்து விடாதீர்கள்! – இறுக்கமான தீர்மானங்களை உடன் எடுங்கள்.
“இலங்கை அரசு வாக்குறுதிகளை அள்ளி வீசும். ஆனால், நிறைவேற்றாது. அதுதான் இலங்கை அரசின் கடந்தகாலச் சரித்திரம். எனவே, வாக்குறுதிகளை நம்பி ஏமாந்து விடாதீர்கள்.”
இவ்வாறு ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவிடம் உதாரணங்களுடன் நேரில் எடுத்துரைத்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.
“ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை, பயங்கரவாதத் தடைச் சட்டம், அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தல் மற்றும் தேர்தல்கள் தொடர்பில் கடந்த காலங்களில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் சர்வதேச சமூகத்துக்கும் வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை அரசு நிறைவேற்றவில்லை. இப்போதும் நீங்கள் வந்தவுடன் வாக்குறுதிகளை இலங்கை அரசு அள்ளிவீசும். அந்த வாக்குறுதிகளை நம்பி ஏமாந்து விடாதீர்கள். கடந்த காலத்தில் இலங்கை அரசு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு உடனடியாக இறுக்கமான தீர்மானங்களை எடுங்கள்” என்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவினர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை இன்று சந்தித்து முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இந்தச் சந்திப்பு கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பியின் கொழும்பு இல்லத்தில் நடைபெற்றது.
இதன்போது கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா. சம்பந்தனுடன் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் எம்.பியும் கலந்துகொண்டார்.
இருவருமே மேற்கண்டவாறு ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவினரிடம் தெரிவித்தனர்.