கோவை கார் வெடிப்பு: விசாரணையில் புதிய தகவல்!

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் கைதானவர்களில் ஒருவரான ஃபிரோஸ், இலங்கை தேவாலய குண்டுவெடிப்பில் தொடர்புடைய ரஷீத் அலி, முகமது அசாருதீனை கேரள சிறையில் சந்தித்ததாக காவல்துறையிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாகக் கூறி முகமது அசாருதீன், ரஷீத் அலி ஆகியோர் என்ஐஏவால் கைது செய்யப்பட்டு தற்போது கேரளத்தின் வியூர் சிறையில் உள்ளனர்.
கடந்த 2019ல் இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின்போது பல்வேறு தேவாலயங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, கோவை உக்கடம் கோட்டைமேடு சங்கமேஸ்வரா் கோயில் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு காா் வெடித்து விபத்து ஏற்பட்டதில் உக்கடம் ஜி.எம். நகரைச் சோ்ந்த ஜமேஷா முபீன் (25) என்ற இளைஞா் உயிரிழந்தாா்.
இதைத் தொடா்ந்து அவருடன் தொடா்பில் இருந்த உக்கடம் பகுதியைச் சோ்ந்த முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), ஜி.எம். நகா் பகுதியைச் சோ்ந்த முகமது ரியாஸ் (27), ஃபிரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26) ஆகியோரை யுஏபிஏ சட்டத்தின்கீழ் போலீஸாா் கைது செய்தனா். மேலும், ஜமேஷா முபீனின் நெருங்கிய உறவினரான அஃப்சா் கான் (28) என்பவரையும் போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.