வீட்டு வேலை செய்ய விருப்பமில்லை என்றால் திருமணத்துக்கு முன்பே பெண் தெரிவிக்கலாம் – மும்பை உயர் நீதிமன்றம்
மனைவியை வீட்டு வேலை செய்ய கூறுவது அவர்களை பணிப் பெண்களை போல் நடத்துவதாக அர்த்தமாகாது என்று மும்பை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த பெண் ஒருவர் தன்னை பணிப்பெண் போல் நடத்துவதாக தனது கணவர், கணவரின் மூத்த சகோதரி மற்றும் மாமியார் ஆகியோர் மீது புகார் அளித்தார். மேலும், கார் வாங்குவதற்காக தன்னிடம் ரூ.4 லட்சம் கேட்டு தொந்தரவு செய்ததாகவும் தனது தந்தை பணம் இல்லை என்று கூறியதையடுத்து தன்னை கணவர் வீட்டார் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தியதாக கூறியிருந்தார்.
இதன் பேரில் மூவர் மீதும் ஐபிசி 323, 504 மற்றும் 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு மும்மை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், புகார் அளித்துள்ள பெண் தனது முந்தைய திருமண வாழ்க்கையின்போதும் இதேபோன்ற குற்றச்சாட்டை முன்வைத்ததாக தெரிவித்தார். மேலும், அவரது தற்போதைய கணவர் வங்கி லோன் மூலம் கார் வாங்கியுள்ளதால், பணம் கேட்டு தொந்தரவு செய்தார் என்பதில் உண்மை இல்லை என்றும் கூறினார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், திருமணமான ஒரு பெண்ணை குடும்பத்தின் நோக்கத்திற்காக கண்டிப்பாக வீட்டு வேலை செய்யச் சொன்னால், அது வேலைக்காரியை நடத்துவது போன்றது என்று சொல்ல முடியாது. வீட்டு வேலைகளைச் செய்ய விரும்பவில்லை என்றால், மணமகள் திருமணத்தைப் பற்றி மறுபரிசீலனை செய்ய திருமணத்திற்கு முன்பே அதைச் சொல்ல வேண்டும் அல்லது திருமணத்திற்குப் பிறகு வீட்டு வேலை செய்யும் சூழல் ஏற்பட்டால் அத்தகைய சிக்கலை விரைவாக சரிசெய்திருக்க வேண்டும்.
மேலும், மணப்பெண்ணின் வீட்டில் பாத்திரம் துலக்குவதற்கு, துணிகளை துவைப்பதற்கு, கூட்டிப் பெருக்குவதற்கு போன்ற வேலைகளை செய்ய பணிப்பெண் உள்ளாரா என்பது குறித்தும் எஃப்.ஐ.ஆரில் இந்த தகவலும் இல்லை. இவை பொதுவாக பணிப்பெண்ணுக்கு வழங்கப்படும்’ என்று கூறியுள்ளது. மேலும், மூவர் மீதான வழக்கையும் ரத்து செய்தது.