இலங்கை மக்களுக்கு நான் எந்தத் தீங்கும் செய்யவில்லை! – நிம்மதியாகவே உறங்குகின்றேன்.
“நாடு வங்குரோத்து அடையாமல் இருப்பதற்கு நான் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தேன். மக்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையையும் செய்தது கிடையாது.”
இவ்வாறு மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.
நாட்டில் தற்போது கடும் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது. மக்கள் பரிதவிக்கின்றனர். இப்படியானதொரு நிலைமை ஏற்பட நீங்களும் காரணம் எனக் கூறப்படுகின்றது. மக்கள் தவிக்கையில் உங்களால் நிம்மதியாக நித்திரை கொள்ள முடிகின்றதா என ஊடகம் ஒன்றால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் கப்ரால் மேலும் தெரிவித்ததாவது:-
“நான் நிம்மதியாகவே உறங்குகின்றேன். ஏனெனில் மக்களுக்கு எவ்வித தீங்கும் இழைக்கவில்லை.
நாடு வங்குரோத்து அடையாமல் இருப்பதற்கு நானே நடவடிக்கை மேற்கொண்டிருந்தேன். எனது மனச்சாட்சி தூய்மையானது, ஆக எந்தவொரு குற்ற உணர்வும் இல்லை.
தனிநபர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைக்கலாம். வழக்குகளை தொடுக்கலாம். அவ்வாறான வழக்குகளையே எதிர்கொண்டு வருகின்றேன். தனிநபர் என்பது ஒட்டுமொத்த மக்களைப் பிரதிபலிக்காது. மக்கள் என் தொடர்பில் தவறான கருத்துக்களை வெளியிடுவதில்லை” – என்றார்.