தெய்வத்துக்கே இந்த நிலை என்றால் மக்களுக்கு என்ன நிலை?
திருக்கோணேஸ்வரத்தின் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக யாழ். வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் அமர்வில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதுடன் கண்டனத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரனால் கொண்டுவரப்பட்ட இந்தத் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
தீர்மானத்தைச் சபையில் சமர்ப்பித்து தவிசாளர் உரையாற்றும்போது,
“போர்க் காலத்தில் இருந்து பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான திருக்கோணேஸ்வரத்தில் உள்ள வளங்கள் மிக மோசமாகக் கபளீகரம் செய்யயப்பட்டு வருகின்றது.
திருக்கோணேஸ்வரத்தை எடுத்து நோக்குவோமானால் அதைச் சுற்றியுள்ள சூழல் மிக மோசமான இராணுவ ஆக்கிரமிப்புக்கு உள்வாங்கப்பட்டுள்ளது. அங்கே சிவ வழிபாட்டை பயப் பீதியிலேயே மக்கள் செய்கின்றனர். இது மிகவும் கண்டிக்கத்தக்க ஒரு விடயம்.
தமிழர் தாயகத்தில் உள்ள பாரம்பரியங்களைக் கபளீகரம் செய்து தங்களுடைய தேவைகளுக்காகத் தொல்பொருள் திணைக்களம் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றது. இது நிறுத்தப்பட வேண்டும்.
இது ஒரு நீண்டகாலப் பிரச்சினை. இதற்குத் தீர்வு கிடைக்கும் எனக் கூறுகின்றார்கள். ஆனால், இன்னும் தீர்வு கிடைக்கவில்லை.
உண்மையிலேயே அது சுற்றுலாவுக்கு ஒரு பொருத்தமான இடமும் அல்ல. அங்கு இந்துக்கள் பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளவேண்டிய தேவைகள் இருக்கின்றன. தற்போது அங்கிருந்த அடையாளங்கள், எச்சங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளன.
நாங்கள் ஏன் இந்த நாட்டில் வசிக்கின்றோம் என அனைத்து மக்களும் நினைக்கும் அளவுக்கு இன்றைய இந்தப் பொருளாதார நெருக்கடியும் நில ஆக்கிரமிப்பும் கொண்டுவந்து விட்டுள்ளன. தெய்வத்துக்கே இந்த நிலை என்றால் மக்களுக்கு என்ன நிலை என எண்ணிப் பார்க்க வேண்டும்.
இந்தக் கண்டனத் தீர்மானத்தின் மூலப் பிரதியை ஜனாதிபதி, பிரதமர், தொல்லியல் திணைக்களத்துக்குப் பொறுப்பான அமைச்சர் மற்றும் தேவையேற்படின் இதனுடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினருக்கும் அனுப்பிவைப்போம்” – என்றார்.