யாழ். மேயர் மணிக்கு எதிராக ஈ.பி.டி.பியினரும் போர்க்கொடி!
யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் வி.மணிவண்ணனின் தன்னிச்சையான முடிவின் பிரகாரம் கல்வியங்காடு பொதுச் சந்தையில் நிறுவிய நினைவுக்கல்லை உடன் அகற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுக்க ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் மாநகர சபையில் தொடரும் மூடு மந்திர நிர்வாகத்தில் சபைக்குத் தெரியாது ஓர் உறுப்பினரின் பெயரை மட்டும் கல்வியங்காடு சந்தையின் கல்வெட்டில் இணைத்தமை தொடர்பில் ஈ.பி.டி.பி. தமது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாநகர சபையின் கல்வியங்காடு சந்தையின் திறப்பு விழா நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. இதன்போது சபையின் அனுமதி இல்லாது மேயர் தனது கட்சியைச் சேர்ந்த ஓர் உறுப்பினரின் பெயரை இணைத்து நினைவுக் கல் நாட்டியுள்ளார்.
இதனைக் கண்டித்து இதற்கு உடன் தீர்வாகக் கல்லை உடன் அகற்றக் கோருவதற்கு ஈ.பி.டி.பியின் மாநகர சபை உறுப்பினர்கள் இன்று (28) மாலை அவசரக் கூடினர். இதன்போதே உடன் நினைவுக்கல்லை அகற்ற வேண்டும் என்ற முடிவை அவர்கள் எட்டியுள்ளனர். இந்தத் தீர்மானம் எழுத்தில் எழுதி ஒப்பமிடப்பட்டுள்ளது.
இதில் யாழ்ப்பாணம் மாநகர சபையில் ஈ.பி.டி.பி. சார்பில் சபையில் அங்கம் வகிக்கும் 10 பேரில் 9 பேரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் அங்கம் வகிக்கும் இருவரில் ஒருவருமாக மொத்தம் 10 பேர் ஒப்பமிட்டபோதும் எஞ்சிய ஓர் உறுப்பினரின் ஒப்பத்தைப் பெற்ற பின்பு அதை மாநகர மேயர் வி.மணிவண்ணனிடம் எதிர்வரும் திங்கட்கிழமை கையளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.