கேரளாவில் பறவை காய்ச்சல் பரவும் அபாயம் – முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 20 ஆயிரம் பறவைகள் அழிப்பு

அண்டை மாநிலமான கேரளாவில் பறவை காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 20 ஆயிரம் பறவைகள் அழிக்கப்பட்டுள்ளன.
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் ஹரிபாட் பகுதியில் உள்ள சில பண்ணைகளில் கடந்த சில நாள்களாக பறவைகள் நோய்வாய்பட்டு இறந்துள்ளன. இதை அடுத்து கால்நடைத்துறை அதிகாரிகள் பறவைகளின் மாதிரிகளை ஆய்வுக்காக போபாலில் உள்ள தொற்று ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைத்தனர். இதில் அந்த பறவைகளுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்துள்ளது.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் கிருஷ்ண தேஜா தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் வளர்க்கப்படும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழி, வாத்துகள் உள்ளிட்ட பறவைகள் அழிக்கப்பட்டன. மேலும் அப்பகுதியில் மனிதர்களுக்கு பறவை காய்ச்சல் பரவல் ஏற்பட்டுள்ளதா என்ற கண்காணிப்பும் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், கேரளா மாநிலம் ஆழப்புழாவில் நிலைமையை ஆய்வு செய்ய 7 பேர் கொண்ட மத்திய சுகாதார குழு அங்கு விரைந்துள்ளது. இவர்கள் ஆய்வு செய்து மத்திய அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளனர். பறவைக் காய்ச்சல் அல்லது ஏவியன் இன்ஃப்ளுவன்சா என்பது ஒரு வைரஸ் தொற்று. இது முதன்மையாக பறவைகளை பாதிக்கும் நிலையில், இது பறவைகளிடம் இருந்து மற்ற விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கும் பரவும் அபாயம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.