தோல்விக்கு இது தான் காரணம்; இலங்கை கேப்டன் வேதனை.
நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.
டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 27வது போட்டியில் இலங்கை அணியும், நியூசிலாந்து அணியும் மோதின.
19.2 ஓவரில் 102 ரன்கள் எடுத்த போது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இலங்கை அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.
இந்தநிலையில், நியூசிலாந்து அணியுடனான இந்த தோல்வி குறித்து பேசிய இலங்கை அணியின் கேப்டனான தசுன் ஷனாகா, பேட்டிங்கில் மட்டுமல்லாமல், பந்துவீச்சிலும் சொதப்பியதே தோல்விக்கான காரணமாக அமைந்துவிட்டதாக வேதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தசுன் ஷனாகா பேசுகையில், “பந்துவீச்சின் போது முதல் 10 ஓவர்களை நாங்கள் மிக சிறப்பாகவே வீசினோம். ஆனால் கிளன் பிலிப்ஸ் அனைத்தையும் மாற்றிவிட்டார்.
அவரை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். நாங்கள் சில கேட்ச்களை தவறவிட்டதும் எங்களுக்கு பிரச்சனையாக அமைந்துவிட்டது. அதே போல் பந்துவீச்சில் அசுர பலம் கொண்ட நியூசிலாந்து அணிக்கு எதிராக 160+ ரன்கள் என்ற இலக்கை எட்டுவது சாதரண விசயம் இல்லை.
குறிப்பாக டிம் சவுத்தி மற்றும் டிரண்ட் பவுல்டின் பந்துவீச்சை எதிர்கொள்வது மிக கடினம். நாங்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளையும் இழந்துவிட்டோம். தவறுகளை திருத்தி கொண்டு அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாக செயல்படுவோம்” என்று தெரிவித்தார்.