அமெரிக்காவில் தேவாலயம் அருகே நடந்த துப்பாக்கி சூட்டில் 6 பேர் படுகாயம்.
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம் பிட்ஸ்பர்க் நகரில் கடந்த 15-ந் தேதி நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர். இந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த ஜான் ஜேம்ஸ் என்பவரின் இறுதி சடங்கு பிட்ஸ்பர்க் நகரில் உள்ள ஒரு தேவாலயத்தில் நேற்று முன்தினம் மாலை நடந்தது. இதில் ஜான் ஜேம்சின் உறவினர்கள், நண்பர்கள் என பலர் பங்கேற்றிருந்தனர்.
தேவாலயத்துக்கு வெளியே இறுதி சடங்கு நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இறுதி சடங்கில் பங்கேற்றிருந்த அனைவரும் அலறியடித்துக்கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர். எனினும் இந்த துப்பாக்கி சூட்டில் 6 பேரின் உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்தன. இதனிடையே துப்பாக்கி சூடு சத்தம் கேட்டதும் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உடனடியாக தேவாலயத்துக்கு விரைந்தனர்.
ஆனால் அதற்குள் தாக்குதல் நடத்திய நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அதன் பின்னர் துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்த 6 பேரையும் போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். துப்பாக்கி சூட்டின் பின்னணி குறித்து தீவிரமாக விசாரித்து வரும் போலீசார், தப்பியோடிய மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.