ராஜபக்சக்கள் மீண்டெழ முடியாது! – அடித்துக் கூறுகின்றார் மைத்திரி.

“வீதியில் திரியும் யாசகர்களுக்கும் மேடையேற முடியும். எனவே, எந்த மேடையில் ஏறினாலும் ‘மொட்டு’க் கட்சியால் மீண்டெழ முடியாது.”
இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“2023 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை முழுமையாக ஆராய்ந்த பின்னரே, அது விடயத்தில் எவ்வாறானதொரு முடிவை எடுக்கலாம் என்ற நிலைப்பாட்டுக்கு வரலாம். ஆயினும், ஜனாதிபதியின் பயணத்தை ‘மொட்டு’ கட்சி தடுக்கவே முற்படும்.
‘மீண்டெழுவோம், மீண்டெழுவோம்’ என மொட்டுக் கட்சியினர் சூளுரைக்கின்றனர். அவர்கள் எப்படி மீண்டெழுவார்கள் எனத் தெரியவில்லை. அது நடக்கப்போவதும் இல்லை.
ஏனெனில் வீதியில் திரியும் யாசகர்களுக்குகூட மேடை ஏறமுடியும். எனவே, யார் வேண்டுமானாலும் கூட்டங்களை நடத்தலாம். ஆனால் ராஜபக்சக்கள் மீண்டெழ முடியாது” – என்றார்.