பஸ் ஸ்டாண்டில் கை துப்பாக்கியுடன் இருவர் கைது.. நெல்லையில் பரபரப்பு
கோவை கார் வெடிப்பு பதற்றத்துக்கு இடையே தமிழ்நாடு முழுவதும் இன்று தேவர் ஜெயந்தி கொண்டாட இருக்கும் நிலையில்,நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகே கை துப்பாக்கியுடன் இருவர் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் தேவர் ஜெயந்தி விழா இன்று கொண்டாடுவதை முன்னிட்டு நேற்று நள்ளிரவு நெல்லை காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை மடக்கி உடைமையை சோதனையிட்டபோது உள்ளே கை துப்பாக்கி இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே இருவரையும் பிடித்து பேருந்து நிலையத்தின் புறக்காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தனர். விசாரணையில் இருவரும் மேலப்பாளையத்தைச் சேர்ந்த முத்துராஜ் (20) மற்றும் பால்துரை(24) என்பது தெரியவந்துள்ளது. மேலும் இருவர் மீதும் ஏற்கனவே சில வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
எனவே, இரவு நேரத்தில் கையில் துப்பாக்கியுடன் வலம் வர காரணம் என்ன ஏதேனும் சதி திட்டத்துடன் துப்பாக்கி எடுத்து வந்தார்களா? துப்பாக்கி வைப்பதற்கான உரிமம் வைத்துள்ளார்களா? என்பது குறித்து மேலப்பாளையம் போலீசார் இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே,கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஒருவித பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இதையொட்டி போலீசார் பல்வேறு சோதனைகளில் ஈடுபட்டு வரும் நிலையில் நெல்லை பேருந்து நிலையம் அருகே இருவர் கை துப்பாக்கியுடன் பிடிபட்ட சம்பவம் மேலும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.