மட்டக்களப்பில் 4 வீடுகள் உடைத்து பெறுமதியான பொருட்கள் திருட்டு.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் பிரிவு மற்றும் காத்தான்குடி பொலிஸ் பிரிவு ஆகியவற்றில் வீடுகள் உடைத்து பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளன.
நான்கு வீடுகள் ஒரே நாளில் 9 மணித்தியாலயத்தில் உடைத்து அங்கிருந்த 28 பவுண் தங்க ஆபரணங்கள், 2 இலச்சத்து 83 ஆயிரம் ரூபா பணம், மடிக்கணினிகள், கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் மணிக்கூடுகள் போன்ற பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் நேற்றுப் பகல் இடம்பெற்றுள்ளது என்று அந்தந்தப் பிரதேச பொலிஸார் இன்று ஊடகங்களிடம் தெரிவித்தனர்.
இந்தத் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக அந்தந்தப் பகுதிகளில் உள்ள சி.சி.ரி.வி. கமராக்களில் திருடர்கள் பதிவாகியுள்ளனர் என்றும், அவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த நான்கு வீடு உடைப்புச் சம்பவங்களும் ஒரே குழுவைச் சேர்ந்த திருடர்களால் அதிகாலை 4 மணி முதல் பிற்பகல் 1 மணிவரையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஒரு வீட்டில் மாத்திரம் வீட்டின் உரிமையாளர் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த வேளை வீடு உடைத்துத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஏனைய மூன்று வீடுகளிலும் வீட்டின் உரிமையாளர்கள் வெளியே சென்றிருந்த வேளையில் வீடுகள் உடைத்து திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
அடையாளம் காணப்பட்ட திருடர்களைத் தேடிப் பொலிஸார் வலைவீசியுள்ளனர்.