பொருளாதார வளர்ச்சியில் மேற்குலக நாடுகளுக்கு சவால் விடும் இந்தியா!
கொரோனாப் பேரிடர் காரணமாக மேற்குலக நாடுகளின் பொருளாதாரமே ஆடிப்போயுள்ள நிலையில், இந்தியா ஓரளவு அதனைத் தாக்குப் பிடித்து பொருளாதாரத்தில் முன்னேறி வருகின்றது என அந்நாட்டு ஊடகங்கள் அறிக்கையிட்டுள்ளன.
அமெரிக்கா, கனடா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. பல தசாப்தங்களுக்குப் பின்னர் அந்த நாடுகளில் பொருள்களின் சடுதியான விலையேற்றம் இடம்பெற்றுள்ளதோடு, அன்றாடம் திரட்டும் பணத்தில் வாழ்க்கை நடத்துபவர்கள் மிகுந்த நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.
ரஷ்யா – உக்ரைன் போரும் உலகப் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகள் ரஷ்யாவை எதிர்க்க வேண்டும் என்பதற்காக உள்நாட்டு பொருளாதாரத்தில் மிகக் கடுமையான நிலைமை காணப்பட்டாலும், உக்ரைனுக்காக பில்லியன் கணக்கில் வாரியிறைக்கின்றன.
இந்த விடயத்தில் இந்தியா தன்னை தற்காத்துக்கொண்டுள்ளது. இந்தியா, போர் உள்ளிட்ட வன்முறைக்கலாசாரம் நீடிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றபோதும், மேற்குலகின் பக்கமோ அல்லது ரஷ்யாவின் பக்கமோ சாயாமல் நடுநிலையாக, அணிசேராக் கொள்கையை பின்பற்றி வருகின்றது.
இந்தியாவின் இந்த ஆண்டில் ஆண்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7 சதவீதத்தில் இருந்து 9.5 சதவீதமாக மூடிஸ் நிறுவனம் உயர்த்தியுள்ளது.
இந்தியா 2023ஆம் ஆண்டில் 5.5 சதவீத பொருளாதார வளர்ச்சியைக் கொண்டிருக்கும் என்றும் மூடிஸ் உறுதி செய்துள்ளது.
2022ஆம் ஆண்டின் மத்திய வரவு – செலவுத்திட்டத்தில் நாட்டின் உள்நாட்டு வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 2022 – 2023 நிதியாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.9 சதவீதமாகவும், மூலதனச் செலவினங்களுக்கான ஒதுக்கீடு 36 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.
இதன்மூலம் தனியார் முதலீடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதோடு, அதற்கான பகிரங்கப் பேச்சுக்களும் ஆரம்பமாகிவிட்டது.
இந்தியாவில் கடந்த மூன்று மாதங்களில் நுகர்ச்சி வீதம் குறைவடைந்துள்ளது. இந்த நிலைமையானது நீடிக்குமாக இருந்தால் இந்தியா தெற்காசிய நாடுகளுக்கு மத்திரமல்ல உலக வல்லாதிக்க நாடுகளுக்கும் முன்னுதாரணமாகவே இருக்கும் என்று அந்நாட்டு ஊடகங்கள் அறிக்கையிட்டுள்ளன.