யாழில் நீதி அமைச்சின் நடமாடும் சேவை!
நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் நடமாடும் சேவை நிகழ்ச்சித் திட்டம் யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் இன்று யாழ். மாவட்ட செயலக வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நடமாடும் சேவையில் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாஸ ராஜபக்ச, அமைச்சின் செயலாளர் வசந்த பெரேரா, அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் குமாரி, இழப்பீடுகளுக்கான பணிப்பாளர் நாயகம் எஸ்.எல்.எம். ஹசீம் மற்றும் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், துறை சார் அதிகாரிகள், நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் அதிகாரிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த நடமாடும் சேவையில் நீதி மற்றும் சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, பதிவாளர் நாயகம் திணைக்களம், ஆட்பதிவு திணைக்களம், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், இழப்பீட்டுக்கான அலுவலகம், காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம், மாகாண காணி ஆணையாளர் நாயகம் ஆகிய அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் பங்குபற்றலுடன் பிறப்பு மற்றும் திருமணச் சான்றிதழ் பெற்றுக்கொள்ளல், பிரஜாவுரிமை சான்றிதழ் பெற்றுக்கொள்ளல், இந்தியாவிலிருந்து திரும்பி வந்த இலங்கையர்களுக்கான காணித் தேவை மற்றும் காணி உரிமை பிரச்சினைகள், வன்முறையால் பாதிக்கப்பட்ட சொத்து மற்றும் உயிரிழப்பு காயத்துக்கான நட்டஈடு பெற்றுக்கொள்ளல், தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்ளல், இழப்பீடுகளுக்கான அலுவலகத்தினூடாக ஏற்கனவே அனுப்பப்பட்ட கோவைகளை பூரணப்படுத்தல் தொடர்பான சேவைகள் இடம்பெற்றன.
அத்துடன் இழப்பீடுகளுக்கான அலுவலகத்தால் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான கொடுப்பனவு, இறப்பு, காயம் அடைந்தவர்களுக்கான கொடுப்பனவு, அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு ஆகியனவும் வழங்கிவைக்கப்பட்டன.