தன்னிச்சையாகச் செயற்பட்டால் இறுதியில் அழிவுதான் ஏற்படும்!
“தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைமைத்துவங்கள் தன்னிச்சையான முறையிலும், எதேச்சதிகாரமாகவும் செயற்பட்டால் கூட்டணி குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி அலை உருவாகி, இறுதியில் அது ஆபத்திலேயே முடியும். எனவே, விட்டுக்கொடுப்புகளுடன் ஜனநாயக வழியில் பயணிப்பதற்குத் தலைமைகள் முன்வர வேண்டும். அதுவே மக்களின் எதிர்பார்ப்பும்கூட.”
இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம். வேலு குமார் தெரிவித்தார்.
கண்டியில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“அடக்கி ஆளும் தனிக்காட்டு ராஜா அரசியலை மலையக மக்கள் நிராகரிக்கின்றனர். கொள்கை ரீதியிலான அரசியலையே அவர்கள் விரும்புகின்றனர். அதன்காரணமாகவே உரிய கொள்கைகளுடன் உதயமான தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கு மக்கள் அமோக ஆதரவு வழங்கினர். எனவே, மக்களின் மனநிலை என்ன?, அவர்கள் எதிர்பார்ப்பது எத்தகைய அரசியல்? என்பவற்றைப் புரிந்துகொண்டே – தவறுகளை திருத்திக்கொண்டு பயணித்தால் மாத்திரமே மக்கள் மத்தியில் நீடித்து நிலைக்க முடியும்.
மக்களுக்கான அரசியல் பயணத்தை மேற்கொள்வதற்கான வழிகாட்டலையே தலைமைத்துவங்கள் வழங்க வேண்டும். ஜனநாயகப் பண்புகளுக்கு இடமளிக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் பெரும் பின்னடைவு ஏற்படும்.
தென்னிலங்கையில் இருந்த இரு பிரதான கட்சிகள்தான் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன. இவ்விரு கட்சிகளின் நிலையும் இன்று கவலைக்கிடமாக உள்ளது. காரணம் தலைமைத்துவங்களின் தன்னிச்சையான முடிவும், மக்களின் மனநிலை அறியாத செயற்பாடுகளுமே.
எனவே, மலையக மக்கள் விரும்பும் – ஏற்கும் தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கும் அவ்வாறானதொரு நிலை ஏற்பட இடமளித்துவிடக்கூடாது” – என்றார்.