சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் குடும்பத்திற்கு 10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!
புழல் சிறையில் ராம்குமார் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் விவகாரம் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
சென்னை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற மென் பொறியாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கடந்த 2016 ம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் தொடர்பாக திருநெல்வேலியைச் சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.
புழல் சிறையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், மின்சார வயரைக் கடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக பத்திரிகையில் வெளியான செய்தியின் அடிப்படையில், தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து இருந்தது.
இந்த வழக்கை விசாரித்த ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்த போது ஆஜரான
புழல் சிறை வார்டன் பேச்சுமுத்து தனது வாக்குமூலத்தில்,
ராம்குமார் கம்பியை கடித்த போது லத்தியால் தள்ளி அவரை காப்பாற்ற முயற்சி செய்ததாக கூறியுள்ளார்.
இதனையடுத்து ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவில்,
சிறையில் குறைந்த ஊழியர்கள் உள்ளதால் ராம்குமார் மரணத்திற்கு அவர்களை மட்டுமே குறை சொல்ல முடியாது எனவும் அரசிக்கு இதில் பொறுப்பு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சிறையில் போதியளவில் அதிகாரிகளை நியமிக்க வேண்டியது அரசின் கடமை என தெரிவித்துள்ள ஆணையம் ராம்குமார் மரணம் தொடர்பாக உண்மையை கண்டறிய சுதந்திரமான விசாரணை தேவை எனவும் தெரிவித்துள்ளது.
ராம்குமார் மரணத்திற்கு இழப்பீடாக அவரது தந்தைக்கு 10 லட்சம் ரூபாயை ஒரு மாத்தில் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ள மாநில மனித உரிமைகள் ஆணையம் சிறையில் கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய போதுமான அதிகாரிகளை நியமிக்க வேண்டுமெனவும் பரிந்துரைத்துள்ளது.