பொலிஸ் அதிகாரி மரணம் பிக்கு உட்பட நான்கு பேர் சந்தேகத்தில் கைது.
அநுராதபுரம், கெப்பித்திகொல்லேவ பிரதேசத்தில் ஏற்பட்ட பதற்ற நிலையை கட்டுப்படுத்த பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று (31) இரவு கெப்பித்திகொல்லேவ, ரம்பகெபூவெவ பிரதேசத்தில், காட்டு யானை தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிடைத்த தகவலின் பேரில், கெப்பித்திகொல்லேவ பொலிஸார் அந்த இடத்திற்குச் சென்று கொண்டிருந்த போது பதற்றமான ஒரு சூழ்நிலை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவ்வேளையில், அப்பகுதியைச் சேர்ந்த பிக்கு உட்பட சுமார் நூறு பேர் கொண்ட கூட்டத்தை கட்டுப்படுத்த பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
அப்போது அங்கிருந்த நபர் ஒருவர் தாக்கியதில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பலத்த காயமடைந்து கெப்பித்திகொல்லேவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் கெப்பித்திகொல்லேவ பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் எனவும், அவர் வாரியபொல பிரதேசத்தில் வசிக்கும் 54 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் பிக்கு உட்பட 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.