கெப்பித்திகொல்லாவவில் பொலிஸ் சார்ஜன்ட் கொலை: இதுவரை 14 பேர் கைது! (வீடியோ)

அனுராதபுரம், கெப்பித்திக்கொல்லாவ பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கெப்பித்திக்கொல்லாவ, ரம்பகபுவெவ பிரதேசத்தில் நேற்று மாலை காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்ததையடுத்து, பிரதேசவாசிகள் சிலர் வீதியை மறித்து டயர்களை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் ஏனைய பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் தமது கடமைகளை சரியாகச் செய்வதில்லை எனக் குற்றஞ்சாட்டி அவர்கள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பில் கெப்பித்திக்கொல்லாவ பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் நான்கு உத்தியோகத்தர்களுடன் அப்பகுதிக்கு நேற்றிரவு சென்று நிலைமையைக் கட்டுப்படுத்தினர்.

இதன்போது அப்பகுதி மக்களிடம் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. அப்போது ஒரு கும்பல் பொலிஸார் மீது தாக்குதல் நடத்த முயன்றனர்.

அப்போது பொலிஸ் சார்ஜன்ட் மீது சிலர் தாக்குதல் நடத்தி அவரது துப்பாக்கியை எடுத்துச் செல்ல முயன்றனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ ஊடகங்களிடம் தெரிவித்தார்.

பின்னர் நிலைமையைக் கட்டுப்படுத்த கெப்பித்திக்கொல்லாவப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி வானத்தை நோக்கிப் பல தடவைகள் துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

இதன்போது கடுமையான தாக்குதலுக்குள்ளான பொலிஸ் சார்ஜன்ட் கெப்பித்திக்கொல்லாவ வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர், மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவரது உடல்நிலை கவலைக்கிடமானதால் மதவாச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

இதையடுத்து பொலிஸ் சார்ஜன்ட் அங்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.