கொழும்பில் அரச படைகள் குவிப்பு! – எதிரணிகள் இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசுக்கு எதிராகக் கொழும்பில் இன்று (02) புதன்கிழமை மாபெரும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதையொட்டி கொழும்பின் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும் முப்படையினர் கொழும்பின் பிரதான இடங்களில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இன்று மாலை 3 மணியளவில் மருதானை சந்தியிலிருந்து ஆரம்பமாகும் ஆர்ப்பாட்டப் பேரணி கோட்டை ரயில் நிலையம் வரைச் செல்லும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கான அனுமதியை நீதிமன்றமும் வழங்கியுள்ளது.
எதிரணி அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், பல்கலைக்கழக மாணவர் அமைப்புக்கள், பொது அமைப்புக்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் இந்த ஆர்ப்பாட்டப் பேரணிக்கு முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளதுடன் இதில் பங்கேற்கவும் உள்ளன.
போராட்டக்காரர்கள் மீதான அடக்குமுறைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும், உள்ளூராட்சி சபைத் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும் எனப் பல்வேறு கோஷங்கள் இதன்போது எழுப்பப்படவுள்ளன.
மருதானை சந்தியிலிருந்து கோட்டை ரயில் நிலையம் வரை பேரணியாக வரும் போராட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகையை நோக்கிப் படையெடுத்தால் அதைத் தடுத்து நிறுத்தும் வகையில் பாதுகாப்புத் தரப்பினர் முன்னாயத்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்