அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டப் பேரணி: ஐக்கிய மக்கள் சக்தி முழு ஒத்துழைப்பு.
“கொழும்பில் நாளை (02) அரசுக்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள பேரணியில் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்காது எனச் சிலர் கூறுகின்றனர். இது முழுக்க முழுக்க பொய். இந்தப் பேரணிக்கு ஐக்கிய மக்கள் சக்தி முழுமையாக ஆதரவளிக்கும் என்பதோடு,ஐக்கிய மக்கள் சக்தியானது நூறு வீதம் தமது ஒத்துழைப்பையும் வழங்கும்.”
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
அடக்குமுறைக்கு எதிராகத் தனித்து நின்று போராடக் கூடாது எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அதற்காக ஒன்றிணைந்து போராட வேண்டும் எனவும் கூறினார்.
ஒதுங்கி, தனிமைப்பட்டு குறுகிய கொள்கைகளின் அடிப்படையில் இந்நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், தற்போது நிலவும் அடக்குமுறைகளை எதிர்கொள்ள அனைவரும் ஒன்றிணைவதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.
இன்று இடம்பெறும் பேரணி ஓர் அமைதி வழிப் பேரணி எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அதனை அடக்குவதற்குப் பாதுகாப்புத் தரப்பினர் தயாராக இருந்தால், உடனடியாக அந்தத் தயார்படுத்தல்களை வாபஸ் பெற வேண்டும் எனவும், அமைதியான முறையில் முன்னெடுக்கப்படும் போராட்டத்துக்கு எவரேனும் இடையூறு விளைவித்தால், அதற்கு எதிராக மேற்கொள்ள முடியுமான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
ஜனநாயக, அமைதி வழிப் பேரணியை எதிர்ப்பதற்கு எவருக்கும் உரிமை இல்லை எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அடக்குமுறையின் பிதாக்கள் ராஜபக்சக்களே எனவும் குறிப்பிட்டார்.
சிறிதம்ம தேரர், வசந்த முதலிகே உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு எவ்வித குற்றச்சாட்டுகளும் இன்றியே சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், ராஜபக்சக்களும் ‘மொட்டு’வின் ஏனைய மக்கள் பிரதிநிதிகளுமே புனர்வாழ்வளிக்கப்பட வேண்டியவர்கள் எனவும் சுட்டிக்காட்டினார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (02) நடைபெற்ற அடக்குமுறைக்கு எதிரான தொழிற்சங்கங்களின் கூட்டுப் பிரகடனத்தில் கையொப்பமிடும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு கூறினார்.