ரஷ்யா மீது கதிரியக்க ஆயுத தாக்குதல்.
கதிரியக்க ஆயுதங்கள் மூலம் மிக மோசமான தாக்குதல் நடத்த உக்ரைன் திட்டமிட்டு இருப்பதாக ரஷ்யா கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து, ஐநா அணுசக்தி அமைப்பின் நிபுணர்கள் குழு ஆய்வு நடத்தி வருகிறது. நேட்டோ அமைப்பில் சேர முயன்ற உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போர், 9வது மாதமாக நீடிக்கிறது. கடந்த சில வாரங்களாக உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தி வருகிறது. உக்ரைனின் மிகப்பெரிய அணு மின் நிலையமான ஜபோரிஜியா அணுசக்தி நிலையத்தை ரஷ்ய படை கைப்பற்றி, அதை சுற்றிலும் ரகசிய கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த இடத்துக்கு உக்ரைன் அணு சக்தி துறை அதிகாரிகளோ அல்லது ஐநாவின் அணு சக்தி அமைப்பை சேர்ந்தவர்களோ சென்று பார்வையிட ரஷ்ய ராணுவம் அனுமதி மறுக்கிறது.
இந்த அணு உலைக்கான எரிபொருள்கள் 174 பெட்டகங்களில் வைக்கப்பட்டுள்ளது. இந்த கிடங்குகளை ரஷ்யா அழிக்க முயற்சிப்பதாக கடந்த வாரம் உக்ரைன் குற்றம்சாட்டியது. ஆனால், தனது நாட்டின் மீது கதிரியக்க ஆயுதங்கள் மூலம் மிக மோசமான தாக்குதலை நடத்த உக்ரைன் திட்டமிட்டு இருப்பதாக ரஷ்யா குற்றம்சாட்டி உள்ளது. இந்நிலையில், சர்வதேச அணுசக்தி முகமையின் தலைவர் ரபேல் குரோசி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ரஷ்யாவின் குற்றச்சாட்டு தொடர்பாக ஐநா அணுசக்தி அமைப்பின் வல்லுநர்கள், உக்ரைனில் 2 இடங்களில் ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்த ஆய்வு விரைவில் முடிக்கப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.