‘பாலம் இடிந்தது கடவுள் செயல் அல்ல; ஊழலின் விளைவு’ – எதைச் சொன்னார் பிரதமர் மோடி?

“இது கடவுள் செயல் அல்ல; ஊழலின் விளைவு” என்று குறிப்பிட்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

“கொல்கத்தா நகரின் இதயம் போன்ற பகுதியில் அண்மையில் இந்த மேம்பாலம் இடிந்துவிழுந்திருக்கிறது. ஆனால், மாநில அரசு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. ஏராளமானோர் உயிரிழந்திருக்கின்றனர், காயமுற்றிருக்கின்றனர். ஆனால், இடது முன்னணியும் திரிணாமுல் காங்கிரஸும் ஒன்றையொன்று குற்றம் சாட்டிக் கொண்டிருக்கின்றன. இதைக் கடவுளின் செயல் என்று கட்டுமான நிறுவனம் தெரிவித்துள்ளது, ஆனால், இது உள்ளபடியே ஊழலின் செயல்!”

“இதைக் கடவுளின் செயல் என்றே எடுத்துக் கொண்டாலும், சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் இந்த பாலம் இடிந்துவிழுந்திருக்கிறது. எந்த மாதிரி அரசு உங்களை ஆட்சி செய்துகொண்டிருக்கிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்ளலாம். எனவேதான், கடவுள் இப்போது இந்தச் செய்தியைத் தெரிவித்துள்ளார், இன்று இந்தப் பாலம் இடிந்துவிழுந்தது, நாளை ஒட்டுமொத்த வங்கத்தையும் அவர் (மமதா) இதேபோல முடித்து விடுவார். வங்கத்தைக் காப்பாற்றுங்கள், அதுதான் கடவுளின் செய்தி” என்றும் தன்னுடைய பேச்சில் குறிப்பிட்டிருந்தார் பிரதமர் மோடி. (இந்தத் தேர்தலில் 294 இடங்களில் 211 இடங்களை வென்று ஆட்சியமைத்தது மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ்).

2016, மார்ச் 31-ல் கொல்கத்தா நகரில் கட்டுமானப் பணியின்போது மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிந்துவிழுந்ததைப் பற்றி, ஏப்ரல் 7-ல் வடக்கு வங்கத்தில் மடரிஹட் என்ற இடத்தில் நடந்த பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசிய பேச்சின் பகுதிதான் இது.

தற்போது புனரமைப்புப் பணிகளை முடித்துத் திட்டமிட்ட காலத்துக்கு முன்னதாகவே திறக்கப்பட்ட நிலையில், குஜராத்தில் மச்சு ஆற்றின் குறுக்கேயிருந்த தொங்கு பாலம் ஞாயிற்றுக்கிழமை மாலை அறுந்து விழுந்ததில் 141 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்யும் “குஜராத் மாடல்” என்று அந்தக் கட்சியால் முன்வைக்கப்படும் மாநிலத்தில் நேரிட்டிருக்கும் இந்த விபத்துக்கான காரணங்கள் பற்றி பிரதமர் மோடி எதுவும் தெரிவிக்கவில்லை.

விரைவில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் குஜராத்தில் நேரிட்டுள்ள இந்த விபத்து பல்வேறு அரசியல் அதிர்வுகளை ஏற்படுத்தியிருப்பதுடன் எதிர்க்கட்சிகளின் கேலிக்கும் கண்டனத்துக்கும் உள்ளாகியிருக்கிறது.

தன்னுடைய சொந்த மாநிலம் என்றபோதிலும்கூட இந்த விபத்து நடந்து இரு நாள்களுக்குப் பிறகே பிரதமர் மோடி அங்கே பார்வையிடச் சென்றதை விமர்சனம் செய்து கோபேக் மோடி என்ற ஹேஷ்டேக் டிரண்ட் செய்யப்பட, பதிலுக்கு விழித்துக்கொண்ட பாரதிய ஜனதா கட்சியினர் வெல்கம் மோடி என்ற ஹேஷ்டேக்கைப் பரவலாக்கினர்.

மேற்கு வங்க விபத்துக்காக திரிணாமுல் காங்கிரஸ் அரசைக் கடுமையாக விமர்சித்ததுடன், தேர்தல் பிரசாரத்திலும் பேசிய பிரதமர் மோடி இப்போது என்ன சொல்லப் போகிறார் என சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

புதுப்பிக்கப்பட்ட பாலம் அறுந்துவிழுந்து 132 பேரின் மரணத்துக்காக சில சொட்டு கண்ணீர் விடுங்கள் மோடிஜி எனக் குறிப்பிட்டு, மோடியின் பேச்சின் பகுதியை விடியோவுடன் இணைத்து திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் தொடங்கிவைத்த இந்த விமர்சனம் இப்போது நாடு முழுவதும் விறுவிறுப்பாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.