ரூ.8 லட்சத்துக்கு கூலிப்படை வைத்து மகனை தீர்த்துக்கட்டிய பெற்றோர்: காட்டிக்கொடுத்த கார்
குடித்துவிட்டு தங்களை துன்புறுத்திய ஒரே மகனை ரூ.8 லட்சத்துக்கு கூலிப்படை வைத்து பெற்றோர் கொலை செய்த சம்பவத்தில், அவர்கள் பயன்படுத்திய காரே அவர்களைக் காட்டிக்கொடுத்துவிட்டது.
மகனைக் கொலை செய்த குற்றத்துக்காக தெலங்கானாவின் கம்மம் பகுதியைச் சேர்ந்த அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் காஷ்ட்ரியா ராம் சிங், மனைவி ராணி பாய் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கூலிப் படையைச் சேர்ந்த நான்கு பேர் கைதாகியுள்ளனர். ஒருவர் தலைமறைவாக இருக்கிறார்.
படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, குடிக்கு அடிமையாகி, நாள்தோறும் குடித்துவிட்டு தங்களைத் துன்புறுத்தி வந்த 26 வயது சாய் ராம் என்ற மகனை திருத்த வழி தெரியாமல், அவரைத் தீர்த்துக்கட்டுவது என்று முடிவெடுத்துள்ளனர் பெற்றோர்.
அக்டோபர் 18ஆம் தேதி சூர்யபெட் பகுதியில், சாய் ராம் கொலை செய்யப்பட்டு, சாலையோரம் வீசப்படுகிறார். மறுநாள் காவல்துறையினர் உடலைக் கண்டெடுத்து குடும்பத்துக்குத் தகவல் தெரிவித்தனர்.
சம்பவம் நடந்த பகுதியில், குற்றவாளிகள் பயன்படுத்தியது, கொலை செய்யப்பட்ட இளைஞரின் குடும்பத்துக்கு சொந்தமானது என்று தெரிய வந்தது. பெற்றோர் மகனைக் காணவில்லை என்று புகார் அளிக்காததும், மகனின் உடலை அடையாளம் காண, குற்றவாளிகள் பயன்படுத்திய அதேக் காரில் பெற்றோர் வந்ததும் காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து, அவர்களிடம் விசாரணை நடத்தியதில் குற்றத்தை ஒப்புக் கொண்டனர். கூலிப் படையினரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த தம்பதியின் மகள், திருமணமாகி அமெரிக்காவில் வாழ்ந்து வருவதும், மகன் குடித்துவிட்டு நாள்தோறும் இவர்களை அடித்துத் துன்புறுத்தியதும், மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பியும் பலனில்லை என்பதும் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக கூலிப்படைக்கு ரூ.1.5 லட்சம் முன்பணமாகக் கொடுத்து, கொலை நடந்து 3 நாள்களுக்குப் பிறகு ரூ.6.5 லட்சம் கொடுத்துள்ளதும் தெரிய வந்துள்ளது.