“எமது நிலம் எமது உரிமை; இராணுவம் வெளியேறு!” – யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் மகஜர்.
“வலிகாமம் வடக்கு உட்பட தமிழர் தாயகம் எங்கும் அபகரிக்கப்பட்ட, அபகரிக்கப்படவுள்ள காணிகள் தொடர்பான அனைத்து செயற்பாடுகளும் நிறுத்தப்பட்டு, அனைத்து காணிகளும் சட்டபூர்வ உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவேண்டும்.”
இவ்வாறு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
வலிகாமம் வடக்கில் பாதுகாப்புத் தரப்பின் ஆக்கிரமிப்பிலுள்ள காணிகளை நிரந்தரமாகச் சுவீகரிக்கும் அரசின் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று தெல்லிப்பழையில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பின் பிரகாரம் நடைபெற்றது. போராட்டத்தின் இறுதியில் “எமது நிலம் எமது உரிமை” என்ற தலைப்பில் தெல்லிப்பழை பிரதேச செயலாளரிடம் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கையளித்த மகஜரிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
“இலங்கை தீவின் பூர்வீக இனமான தமிழினம், வரலாற்று ரீதியாக தம்மை தாமே ஆளும் தனி இராசதானியாகவே வாழ்ந்து வந்தனர். ஆனால், ஆங்கிலேயரின் ஆக்கிரமிப்பின் போது இத்தீவில் இருந்த தமிழ் மற்றும் சிங்கள இராசதானிகளை முழுமையாக கைப்பற்றியவர்கள் தமது நிர்வாக ஒழுங்குக்காக வேறு வேறாக இருந்த தமிழ் தேசத்தையும் சிங்கள தேசத்தையும் ஒருங்கிணைத்து ‘சிலோன்’ எனும் ஒரு நிர்வாக மையத்தை நிறுவினார். இத்தீவை விட்டு வெளியேறும் போது ஆங்கிலேயர்கள் தாம் ஏற்படுத்திய புதிய நிர்வாக ஒழுங்கையும், தமிழராகிய எமது இறைமையையும் சேர்த்து சிங்கள தேசத்திடம் கையளித்து விட்டு வெளியேறிவிட்டனர்.
இவ்வாறு தமிழினத்தின் இறைமையை குறுக்கு வழியில் கையகப்படுத்திக் கொண்ட சிங்கள பேரினவாத தேசம், அன்று முதல் தமிழினத்தின் இருப்பை அழிப்பதையே தனது முழுமுதற் கொள்கையாக கொண்டு இயங்கி வருகின்றது. ஏறத்தாழ 450 வருடங்களாக தொடராக நிகழ்த்த ஐரோப்பியர்களின் ஆக்கிரமிப்புகளின் போதும் கூட தமிழினமாகிய நாம் எமது தொடர்ச்சியான நிலப்பரப்பினையும் ஆட்புலத்தினையும் பாதுகாத்தே வந்தோம். ஆனால் சிங்கள பேரினவாதம், தமிழர்களில் பூர்வீக நிலங்களை ஆக்கிரமித்து சிங்கள பெளத்த மயமாக்குவதை தொடர் நடவடிக்கையாகவே மேற்கொண்டு வருகின்றது.
ஆங்கிலேயர்கள் வெளியேறும் முன்பே 1930 ஆண்டளவில் சிறிது சிறிதாக ஆரம்பித்த ஆக்கிரமிப்பானது 1949 ம் ஆண்டு ஆரம்பமான கல்லோயா குடியேற்றத்தின் மூலம் பாரியளவில் திட்டமிட்ட குடியேற்றங்களாக மாறத் தொடங்கின. பின் மகாவலி திட்டத்தின் ஊடக தமிழினத்தின் நில பரம்பல் பாரியளவில் மாற்றப்பட்டு எமது இருப்பையே கேள்விக்கு உள்ளாகும் வகையில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டன.
தமிழர் தாயகம் எங்கும் முளைக்கத் தொடங்கிய சிங்கள பெளத்த மயமாக்களை தடுக்க நாம் மேற்கொண்ட அகிம்சை போராட்டங்கள் பலனளிக்காது போகவேயே ஆயுத போராட்டம் ஆரம்பமானது. இப்போராட்டம் வலுப்பெறத் தொடங்கிய பின்னர்தாம் எமது நிலங்களை ஓரளவாவது பாதுகாக்க முடிந்தது.
ஆனாலும் எமது உரிமை போராட்டமானது பயங்கரவாதமாக சித்தரிக்கப்பட்டு உலக நாடுகளின் துணையுடன் மெளனிக்கப்பட்ட பின்னர் சிங்கள பெளத்த ஆக்கிரமிப்புகள் மிக வேகமாக தமிழர் தாயகத்தை மீண்டும் விழுங்கத் தொடங்கிவிட்டது.
சிங்கள பெளத்த மக்கள் எவருமே வாழாத வடக்கு கிழக்கு மாகாணங்களில் வலிந்து பெளத்த விகாரைகளை அமைத்து, அதனூடாக சிங்கள குடியேற்றங்களை உருவாக்கி எமது நிலங்களை ஆக்கிரமிக்கும் செயல்பாடுகள் மிகவேகமாக நடைபெற்று வருகின்றது.
இன்று தொல்பொருள் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், வனப் பாதுகாப்புத் திணைக்களம், நிலவள திணைக்களம், பௌத்த சாசன அமைச்சு மற்றும் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை ஆகிய அரச திணைக்களங்கள், சிங்கள பௌத்த பேரினவாத அரசின் நேரடி நெறிப்படுத்தலில் நில அபகரிப்பை பல்வேறு வடிவங்களிலும் மேற்கொண்டு வருகின்றனர்.
அதற்கு மேலதிகமாக சிறிலங்காவின் சிங்கள ஆயுதப்படையினரை வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் நிலையாக நிலைநிறுத்தும் நோக்கத்துடன் தமிழ் மக்களின் காணிகள் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடைபெறுகின்றது.
தனி தமிழ் பிரதேசமாக இருந்த அம்பாறை மாவட்டத்தில் இன்று சிங்கள ஆக்கிரமிப்பினால் இன்று எமது பெரும்பான்மையை இழந்து நிற்கின்றோம்.
அதேபோல் திருகோணமலை மாவட்டத்தின் தமிழினம் ஓரம் கட்டப்பட்டு எமது நிலங்களையும் இழந்து கொண்டிருக்கின்றோம்.
மட்டக்களப்பு மாவட்டத்திலும் மயிலைத்தானை-மாதவனை தமிழரின் மேய்ச்சல் தரை நிலங்கள் உட்பட பல பகுதிகளை ஆக்கிரமிக்க பல்வேறு முயற்சிகள் தொடர்ச்சியாக நடைபெறுகின்றது.
கிழக்கு மாகாணத்தில் பாரியளவில் தமிழரின் நிலங்களை விழுங்கிய சிங்கள பேரினவாத பூதம், வடமாகாணத்தில் எமது நிலங்களை விழுங்குவதில் இன்று தீவிரமாக உள்ளது.
வவுனியாவில் எல்லைப்புற கிராமங்கள், முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்புற கிராமங்களும், கரையோர கிராமங்களும் தொடராக ஆக்கிரமிக்கப்படுகின்றது.
வெடுக்குநாறி மலை, குருந்தூர் மலை, நீராவியடி பிள்ளையார் கோவில், கன்னியா வெந்நீர் ஊற்று உட்பட்ட சுமார் 200 ற்கும் மேற்பட்ட தொன்மை வாய்ந்த தமிழரின் பாரம்பரிய வழிபாட்டு தளங்களை வடக்கு-கிழக்கு எங்கிலும் கையகப்படுத்துவதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகிறன.
தற்போது வலிகாமம் வடக்கில் 2 ஆயிரத்து 467 ஏக்கர் நிலத்தை சிங்கள தேசத்தின் சட்டத்தினூடாக அபகரிப்பதற்கு முனைந்து வருகின்றது.
இவ்வாறு பல்வேறு வகையிலும் தமிழினத்தின் தொடர்ச்சியான புவியியல் ரீதியான இனப்பரம்பலை மாற்றியமைப்பதினூடாக ஐ.நாவின் சுயநிர்ணய சாசனத்தில் வரையறுக்கப்பட்ட ஓர் தேசிய இனத்திற்குரிய தகைமையை தமிழினம் இழக்கச் செய்வதில் சிங்கள பெளத்த பேரினவாதம் மும்முரமாக உள்ளது.
தமிழினம் தனது தலைவிதியை தானே தீர்மானிக்கும் உரிமையை மறுதலிப்பதில் சிங்கள தெளிவாக திட்டமிட்டு வேலை செய்து வருகின்றது. எமது நிலங்களை நாம் பாதுகாக்க தவறுவோமேயானால் தமிழினத்தின் இருப்பே கேள்விக்குறியாகிவிடும்.
வடக்கு, கிழக்கு எங்கும் பரந்து வாழும் மாணவர்கள், பாதிக்கப்பட்ட மக்கள், சிவில் சமூகத்தினர், அரசியல் கட்சிகள், பொதுமக்களாக கூடியுள்ள நாம், இன்று முன்வைக்கும் கோரிக்கையாவன:-
1. வலிகாமம் வடக்கு உட்பட தமிழர் தாயகம் எங்கும் அபகரிக்கப்பட்ட, அபகரிக்கப்படவுள்ள காணிகள் தொடர்பான அனைத்து செயற்பாடுகளும் நிறுத்தப்பட்டு, அனைத்து காணிகளும் சட்டபூர்வ உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவேண்டும்.
2. தமிழர் தாயகம் எங்கும் ஆக்கிரமித்து நிற்கும் சிங்கள ஆயுதப் படைகள் உடனடியாக வெளியேற்றப்படவேண்டும்.
3. தமிழினத்தின் அரசியல் தலைவிதியை தீர்மானிக்கும் உரிமை தமிழ் மக்களிடம் மட்டுமே உள்ளது. தமிழ் மக்களுக்கான நிரந்திர அரசியல் தீர்வு தொடர்பான தீர்மானங்களை சிங்கள அரசோ, ஏன் தமிழ் அரசியல்வாதிகள் கூட தீர்மானிக்க முடியாது. ஒரு சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் தமிழ் மக்களே தீர்மானிப்பதற்கான வழி ஏற்படுத்தப்பட வேண்டும்.
தற்போதைய நிலையில் நாம் எமது பாதுகாப்பு அரண்களை இழந்து சிங்கள பெளத்த அரச பேரினவாதத்தின் ஆயுதமுனையின் முன் நிராயுதபாணிகளாக நிற்கின்றோம்.
எமது இந்த நிலைக்கு எமது அயல் நாடான இந்தியாவும் சர்வதேசமும் பொறுப்பு கூறவேண்டிய நிலையிலேயே உள்ளார்கள்.
இந்தப் பொறுப்பு நிலையில் இருந்து இவர்கள் உரிய தீர்வினை இவர்கள் பெற்றுதராது, இந்நிலை தொடர் கதையாகி, நாம் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு, எமது மக்களின் இருப்பும் பாதுகாப்பும் கேள்விக்குறியாகும் பட்சத்தில் எமது போராட்ட வழிமுறைகளை நாமே தீர்மானிக்கும் நிலைக்குத் தள்ளப்படுவோம்” – என்றுள்ளது.