மீண்டும் யுத்தமா? – அரசிடம் துரைரெட்ணம் கேள்வி.

“மீண்டும் ஒரு யுத்தம் ஆரம்பமாகப் போகின்றதா? அல்லது இராணுவம் வேறு ஏதும் திட்டமிட்ட செயற்பாடுகளை முன்னெடுக்க இருக்கின்றதா?” – என்று அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரெட்ணம்.

மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இன்று ஊடகங்களுக்கு அவர் கருத்துத் தெரிவிக்கும்போது மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கை அரசால் யாழ். குடாநாட்டில் வலிகாமம் வடக்குப் பகுதியில் ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட காணிகளைக் கையகப்படுத்துவதற்கான செயற்பாடுகள் முடுக்கி விடப்படுள்ளன.

வடக்கு – கிழக்கில் தற்போது சுமுகமான நிலை இருக்கின்றபோது இங்கு ஏன் முப்படைகளுக்கான காணி தேவைப்படுகின்றது? இங்கு ஏன் காணிகள் கையகப்படுத்தப்பட வேண்டும்?

மீண்டும் ஒரு யுத்தம் ஆரம்பமாகப் போகின்றதா அல்லது இராணுவம் வேறு ஏதும் திட்டமிட்ட செயற்பாடுகளை முன்னெடுக்க இருக்கின்றதா அல்லது வடக்கு – கிழக்கில் தமிழர் பிரதேசங்களில் பொதுவான காணிகள் இருக்கக் கூடாது என்பதற்கான செயல் வடிவங்களை அரசு தொடங்கி இருக்கின்றதா?

மத்திய அரசு, வடக்கு – கிழக்கை எடுப்பார் கைப்பிள்ளைகள் போன்று பார்க்காமல் உடனடியாக இந்தக் காணிகளை கையகப்படுத்தும் செயற்பாடுகளை நிறுத்த வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.