ரிஷி சுனக் அணிந்த கிரீடம்
பிரித்தானியாவில் நிலவிய அரசியல் குழப்பநிலை தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது.
இந்தியப் பின்புலத்தைக் கொண்ட ரிஷி சுனக் தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார். நிதி அமைச்சராக அவருக்கு உள்ள அனுபவம், ஒரு பொருளாதாரப் பட்டதாரியாக அவருக்கு உள்ள அறிவுத் திறமை என்பவை காரணமாக அவரால் நாட்டின் பொருளாதாரத்தைச் சீரழிவில் இருந்து காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
பழமைவாதக் கட்சியின் தலைமைப் போட்டியில் அவர் இரண்டு மாதங்களுக்கு முன்னர் கலந்து கொண்டிருந்த போது, அவரைத் தெரிவுச் செய்யத் தவறிய கட்சி முக்கியஸ்தர்களே இன்று அவரைக் கொண்டாடுவதைப் பார்க்க முடிகின்றது. இன்றைய நிலையில் ரிஷியை விட்டால் வேறு கதி இல்லை என்பதன் வெளிப்பாடே இது.
ஆசியப் பின்னணியைக் கொண்ட ஒருவர் முதல் தடவையாக பிரித்தானியப் பிரதமராகப் பதவியேற்று உள்ளார். உலக அரசியலில் உலகளாவிய அடிப்படையில் உருவாகி வரும் மாற்றத்தின் அடையாளமாக இதனைக் கருத முடியும். ஒரு காலகட்டத்தில் சாத்தியமே இல்லை எனக் கருதப்பட்டு வந்த இதுபோன்ற விடயங்கள் இன்று சர்வ சாதாரணமாக நடைபெற்று வருவதை அவதானிக்க முடிகின்றது.
வெள்ளை இனப் பெருமிதம் கொண்ட அமெரிக்காவில் கறுப்பினத்தவர் ஒருவர் அரசுத் தலைவராக நியமனம் பெற்றது, தற்போதைய ஆட்சியில் துணை அரசுத் தலைவராக ஒரு இந்திய வம்சாவளிப் பெண் பதவி வகிப்பது போன்ற விடயங்கள் மேற்குலக ஜனநாயகத்தின் தவிர்க்க முடியாத அம்சங்களாக மாறியுள்ளன.
ஆனால், இவை அடிப்படையான மாற்றங்களா என்ற கேள்வி தொடரவே செய்கின்றது.
காலனித்துவ நாடுகளின் வரலாற்றில் முன்னாள் குடியேற்ற நாடுகளின் பிரசைகள் குடியேறுவதும், அவர்கள் பல்வேறு துறைகளிலும் முன்னேறி வருவதும் காலனித்துவத்தின் பக்க விளைவுகளே என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அது போன்ற ஒரு சம்பவமே தற்போது பிரித்தானியாவில் இடம்பெற்று இருக்கின்றது.
பிரித்தானிய வரலாற்றில் ரிஷி அவர்களுக்குப் பல சிறப்புகள் உண்டு. ஆசியப் பின்னணியைக் கொண்டவர் என்பதற்கும் அப்பால் மிக இளம் வயதில் தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர் என்ற பெருமையையும் அவர் பெறுகின்றார். அத்தோடு இதுவரை பதவி வகித்த தலைமை அமைச்சர்களிலேயே மிகப் பெரும் செல்வந்தர் எனவும் அவர் அறியப் படுகின்றார். கிடைக்கின்ற தகவல்களின் படி அவரின் சொத்து மதிப்பு 730 மில்லியன் பவுண்ட்ஸ் ஆக உள்ளது. அவரது ஆடம்பர வாழ்வு பற்றிச் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. அதேவேளை, இவ்வளவு சொத்துக்களைக் கொண்டுள்ள அவரின் ஆட்சி யாருக்கானதாக இருக்கப் போகின்றது என்பதிலும் ஐயம் இல்லை.
வரி ஏய்ப்பு தொடர்பில் குற்றச்சாட்டுக்கு ஆளானவரே ரிஷி என்பது பலருக்கும் நினைவில் இருக்கக் கூடும். தற்போது அவரின் அமைச்சரவையில் இடம் பிடித்துள்ள பலரும் ஏற்கனவே ஏதோவொரு குற்றச்சாட்டைச் சந்தித்தவர்களே. பழமைவாதக் கட்சியில் இவர்களை விட்டால் வேறு யாரும் இல்லை என்பது ஒருபுறம் இருக்க, உலகளாவிய அடிப்படையில் அரசியலில் இருப்போரில் பெரும்பாலானவர்கள் இவ்வாறானவர்களாகவே உள்ளார்கள் என்ற யதார்த்தத்தையும் தெரிந்து கொள்வது நல்லது.
பிரித்தானியாவின் பொருளாதாரத்தைச் சீர் செய்வதே தனது தலையாய பணி என ரிஷி கூறியுள்ளார். பிரித்தானியப் பொருளாதாரம் என ரிஷி கருதுவது சாதாரண மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதையா அல்லது பெரும் பணக்காரர்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதையா? அவரது இலக்கு சாதாரண மக்களின் பொருளாதார மேம்பாடாக இருக்காது என்பது புரிந்து கொள்ளப்படக் கூடியதே. ஏனெனில் இன்று அவரை தலைமை அமைச்சராக ஆக்கி அழகு பார்ப்பது சாதாரண மக்கள் அல்ல, மாறாகப் பெரும் பணக்காரர்களே. எனவே, அவர்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவது அன்றி அவருக்கு வேறென்ன பணி இருக்கப் போகின்றது?
ஆனால், ரிஷி அவர்களின் பயணம் அத்துணை இலகுவானதாக இருக்கப் போவதில்லை என்பது மட்டும் நிச்சயம்.
இன்றைய நிலையில் அவரின் முன்னாக பொருளாதாரப் பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டிய மிகப் பாரிய பொறுப்பு உள்ளது. அதேவேளை, உக்ரைன் விவகாரமும் அதனால் தோன்றியுள்ள எரிபொருள் நெருக்கடியும் பூதாகாரமாக உள்ளது. ரஸ்யா மீதான பொருளாதாரத் தடை காரணமாக உள்நாட்டில் அதிகரித்துள்ள பொருள்களின் விலையேற்றம் சாதாரண மக்களை வாட்டி வதைக்கின்றது. இதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்து தொழிற் சங்க நடவடிக்கைகளும், வேலை நிறுத்தப் போராட்டங்களும் வரிசை கட்டி நிற்பதைப் பார்க்க முடிகின்றது. இவை யாவும் அவர் முன்னால் உள்ள சவால்கள். இந்தச் சவால்களை எதிர்கொண்டு அவர் திணறும் போது, அதனைப் பார்த்துச் சந்தோசப்படப் போகின்றவர் வேறு யாருமல்ல. பிரித்தானிய வரலாற்றிலேயே மிகக் குறுகிய காலம் பதவி வகித்தவர் எனக் கருதப்படும் முன்னாள் தலைமை அமைச்சர் லிஸ் ட்ரஸ் அவர்களே. இந்தப் பிரச்சனைகளைச் சமாளிக்க வழி தெரியாமல் விழி பிதுங்கி நின்றவர் அவர். தனக்கு அவமானம் நேர்ந்தாலும் பரவாயில்லை என அவர் அதிலிருந்து தப்பித்துக் கொள்ள, தானாக வந்து மாட்டிக் கொண்டுள்ளார் ரிஷி.
இந்தச் சூழலில் இருந்து, அவர் தப்பித்துக் கொள்வாரா? அல்லது தனது முன்னோடிகள் போன்று அவரும் மாட்டிக் கொண்டு முழிப்பாரா என்பது கிட்டிய எதிர்காலத்தில் தெரிந்துவிடும்.
இந்த வேளையில் ஒரு விடயம் தொடர்பில் எச்சரிக்கையோடு இருப்பது நல்லது எனச் சொல்லத் தோன்றுகிறது.
ரிஷி அவர்களைப் பற்றிப் பேசுகின்ற எம்மவர்கள், குறிப்பாக இந்தியர்கள் அவர் ஒரு இந்து என்பதற்கு அழுத்தம் கொடுக்க விரும்புவதைப் பார்க்க முடிகின்றது. ஏற்கனவே, இந்தியாவில் தற்போதைய பாரதீய ஜனதா கட்சி ஆட்சியில் இந்துத்துவா என்ற கொள்கை ஒரு பாசிசமாக உருமாறி வருவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. தனது இந்துத்துவாக் கொள்கையை இந்தியர்கள் பரந்து வாழும் அனைத்து நாடுகளிலும் பரவலாக்கி, அதற்கூடாக ஒரு அணிதிரட்டலைச் செய்ய பாரதீய ஜனதா கட்சியும், அதன் தத்துவார்த்த இயக்கமுமான ஆர்எஸ்.எஸ்.சும் கடும் முயற்சி செய்து வருகின்றன. இந்தச் சுழலில் ரிஷி சிக்கிக் கொண்டுவிடக் கூடாது என்பதில் அவரும் அவர் சார்ந்தவர்களும் கவனமாக இருப்பது நல்லது.