அரசு கோப்புகளை மலையாளத்தில் தான் எழுத வேண்டும் – பினராயி விஜயன்
கேரளாவில் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.அங்கு மலையாளம் மொழியை முன்னிலைப்படுத்தி, வளர்த்தெடுக்க அரசு சார்பில் விழிப்புணர்வு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதன் ஒரு பகுதியாக மலையாள மொழியின் அலுவல் பயன்பாட்டை கட்டாயமாக்கும் விதமாக ஒரு வார விழிப்புணர்வு திட்ட நிகழ்ச்சியை முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கிவைத்தார். இந்த நிகழ்வில் முதல்வர் பினராயி, மலையாள பல்கலைக்கழகம் மற்றும் மலையாள மொழி இயக்கம் தொடர்பான பணிகளை தீவிரப்படுத்த அரசு உறுதி பூண்டுள்ளது என்றார். தொடர்ந்து பேசிய அவர், அரசு அதிகாரிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கினார். அதன்படி, இனி அரசு அலுவலகங்களில் கோப்புகளை ஆங்கிலத்தில் எழுதக் கூடாது, மலையாளத்தில் தான் எழுத வேண்டும் என திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளார்.
ஆங்கிலத்தில் கோப்புகளை எழுதுவது மாநில மக்களின் உரிமையை மறுக்கும் செயல், மலையாளத்தில் கோப்புகளை நிர்வகிப்பதில் அதிகாரிகள் கவனம் தர வேண்டும். இது தவறினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயம் என எச்சரித்துள்ளார். மேலும், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மலையாளம் மொழி கற்றுத்தர அரசு ஆர்வத்துடன் உள்ளது. எனவே, விருப்பம் உள்ள வேற்று மாநில தொழிலாளர்களுக்கு மலையாள மொழி கற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றுள்ளார்.
கடந்த சில வாரங்களாகவே இந்தி மொழி திணிப்பு பிரச்னை தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் தலைதூக்கியுள்ளது. மத்திய அரசுக்கு எதிராக முதலமைச்சர் ஸ்டாலின், பினராயி விஜயன் ஆகியோர் கடிதம் எழுதியுள்ள நிலையில், தற்போது மலையாள மொழிக்கு முன்னிலை என்ற நடவடிக்கைகளை பினராயி கையிலெடுத்துள்ளார்.