தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது பாகிஸ்தான்- அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கிறது.
டி20 உலகக் கோப்பையில் இன்று தென்ஆப்பிரிக்கா – பாகிஸ்தான் அணிகள் மோதின.
முதலில் ஆடிய பாகிஸ்தான் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷபாப் கான் 52 ரன்களும், இஃப்திகார் அகமது 51 ரன்களும், முகமது ஹாரிஸ் மற்றும் முகமது நவாஸ் ஆகியோர் தலா 28 ரன்களும் எடுத்தனர்.
இதைத்தொடர்ந்து, 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. அந்த அணி 9 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட் இழப்பிற்கு 69 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.
டக்வொர்த் லூயிஸ் முறைப்படி பாகிஸ்தான் அணியை விட தென் ஆப்பிரிக்கா 15 ரன்கள் பின்தங்கியிருந்தது. இதனால் இப்போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டால் பாகிஸ்தான் அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் என்ற நிலை இருந்தது.
ஆனால் சிறிது நேரத்தில் மழை நின்றதால் மீண்டும் போட்டி தொடங்கியது. போட்டி நேரம் பாதிக்கப்பட்டதால் ஓவர்கள் குறைக்கப்பட்டது. டக்வொர்த் லூயிஸ் விதிப்படி தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற 14 ஓவர்களில் 142 ரன்கள் ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இந்த இலக்கை நோக்கி பயணித்த தென் ஆப்பிரிக்கா, 14 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்களே எடுத்தது. இதனால் பாகிஸ்தான் அணி, 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் டெம்பா பவுமா 36 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தானின் ஷாகீன் ஷா அப்ரிடி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி குரூப்2 புள்ளி பட்டியலில் 3ம் இடத்திற்கு முன்னேறியது. அரையிறுதி வாய்ப்பிலும் நீடிக்கிறது.