தமிழர்களுக்கான தீர்வைக் கோர முன் தமிழ் அரசியல்வாதிகளே ஒன்றுபடுக!

“வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு காண ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு தயாராகவுள்ளது. அதற்கு முன்னர் பிளவுபட்டிருக்கும் தமிழ் அரசியல்வாதிகள் ஓரணியில் சங்கமிக்க வேண்டும்.
இவ்வாறு வலியுறுத்தினார் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ராஜபக்ச அரசு வேறு. ரணில் அரசு வேறு. தற்போது ஆட்சியில் இருப்பது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு.
இந்த ஜனாதிபதியும் சரி, இந்த அரசில் உள்ளவர்களும் சரி தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நிரந்தரத் தீர்வுகாணத் தயாராகவுள்ளனர்.
ஆனால், தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒரு பகுதியினர் இந்த அரசுடன் நெருங்கிச் செயற்படுகின்றனர். இன்னொரு பகுதியினர் இந்த மீது நம்பிக்கை வைக்கத் தயங்குகின்றனர். மற்றொரு பகுதியினர் தங்களுக்கிடையிலான கட்சி ரீதியிலான மோதலால் ஒதுங்கி நிற்கின்றனர்.
பிளவுபட்டிருக்கும் தமிழ் அரசியல்வாதிகள் ஓரணியில் இணைந்தால்தான் அரசுடன் திறந்த மனதுடன் பேசி தீர்வு காண முடியும்” – என்றார்.