ஆதார் இல்லாததால் சிகிச்சை மறுப்பு…. தாயும், இரட்டை சிசுவும் உயிரிழப்பு

கர்நாடகா மாநிலத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கஸ்தூரி என்ற கர்ப்பிணி ஆதார் அடையாள அட்டை காட்டாததால் மருத்துவர்கள் பிரசவம் பார்க்க மறுத்துள்ளனர். இதன் காரணமாக அந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு வீட்டிலேயே குழந்தை பிறந்ததால் அவரும் பிறந்த இரட்டை பச்சிளங்குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கர்நாடகா மாநிலம் தும்மகூரு பகுதியில் கஸ்தூரி என்ற கர்ப்பிணி தனது மகளுடன் வசித்து வந்துள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த கஸ்தூரி பிழைப்புக்காகத் தனது கணவருடன் பெங்களூரூவில் வசித்துவந்துள்ளார். சமீபத்தில் அவரது கணவர் உயிரிழந்த நிலையில், பெங்களூருவிலிருந்து குடிபெயர்ந்து தும்மகூருவுக்கு குடிபெயர்ந்துள்ளார். நிறைமாத கர்ப்பிணியான கஸ்தூரிக்கு கடந்த புதன்கிழமை இரவு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கஸ்தூரியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் சரோஜம்மா என்ற பெண் அவரை தும்மகூரு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு கஸ்தூரியின் ஆதார் அல்லது கர்ப்பிணி அடையாள அட்டை கொடுக்க வேண்டும் இல்லையென்றால் அனுமதிக்க முடியாது என மருத்துவமனை ஊழியர்களும் நிர்வாகிகளும் தெரிவித்துள்ளனர்.

சரோஜம்மா எவ்வளவோ கேட்டுப்பார்த்தும் மருத்துவமனை நிர்வாகம் அனுமதிக்க முடியாது என கறாராக கூறியுள்ளது. வேண்டும் என்றால் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என நிர்வாகிகள் கூறிய நிலையில், பணம் இல்லாததால் கஸ்தூரியை வீட்டிற்கே அழைத்து சென்றுள்ளனர்.

இந்நிலையில், நள்ளிரவில் கஸ்தூரிக்கு வீட்டிலேயே பிரசவம் நிகழ்ந்து இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால், தாயும் இரு பச்சிளம் குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அங்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளூர் மக்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அதேபோல், எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகளும் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளது.

இந்நிலையில், கர்நாடகா சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் மருத்துவமனைக்கு சென்று ஆர்வு நடத்தினார். மேலும், டியூட்டி டாக்டர் உஷா மற்றும் மருத்துவமனையின் 3 செவிலியர்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்ட அமைச்சர் துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார். சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்த மாவட்ட சுகாதார அலுவலர் மஞ்சுநாத், நோயாளிக்கு சிகிச்சை செய்வதுதான் மருத்துவரின் முதல் வேலை, அடையாள அட்டை போன்றவற்றை சிகிச்சைக்கு பின்னர் கேட்டு வாங்கிக்கொள்ளலாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.