இந்திய பணக்காரர்களின் எண்ணிக்கை 18 லட்சமாக அதிகரிப்பு: பிரைஸ் ஆய்வு தகவல்

இந்தியாவில் பணக்காரர்கள் எண்ணிக்கை 18 லட்சமாக அதிகரித்துள்ளதாகவும், மொத்த மக்கள் தொகையில் 2004-05 இல் 14 சதவீதமாக இருந்த நடுத்தர வர்க்கத்தினரின் எண்ணிக்கை 2021-22ல் 31 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும், இது 2047க்குள் இரட்டிப்பாகும் என்று பிரைஸ் ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் நுகர்வோர் பொருளாதாரம் குறித்த மக்கள் ஆராய்ச்சி(பிரைஸ்) என்ற சிந்தனை அமைப்பு, “இந்தியாவின் நடுத்தர பிரிவு மக்கள் வளர்ச்சி” என்ற பெயரில் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட 63 நகரங்களில் ஆய்வு நடத்தியது.

ஆய்வின் முடிவில், நாட்டு மக்களில் 2021 இன் வருமான அடிப்படையில் 7 குழுக்களாக பிரிக்கப்பட்டனர். குறைந்தபட்சம் குடும்ப ஆண்டு வருமான ரூ.1.25 லட்சத்துக்கு கீழ் உள்ளவர்கள் மிகவும் வறுமையானவர்கள், ரூ.5 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரையில் உள்ளவர்கள் நடுத்தர பிரிவு மக்கள், அதிகபட்சமாக ரூ.2 கோடிக்கும் மேல் குடும்ப வருமானம் உள்ளவர்கள் “சூப்பர் பணக்காரர்கள்” என வகைப்படுத்தப்பட்டனர்.

இதன்படி, 1994-95 இல் 98 ஆயிரமாக இருந்த சூப்பர் பணக்காரர்களின் எண்ணிக்கை, 2020-2021 இல் 18 லட்சமாக அதிகரித்துள்ளது. இந்தியாவின் பணக்கார மாநிலமாக மகாராஷ்டிரம், அதைத் தொடர்ந்து தில்லி மற்றும் குஜராத் இடம் பெற்றுள்ளது. 2020-21 க்கு இடைப்பட்ட காலத்தில் சூரத் மற்றும் நாக்பூர் அதிக வருமானம் பெறும் பிரிவில் மிக வேகமான வளர்ச்சியை கண்டுள்ளன.

மொத்த மக்கள் தொகையில் நடுத்தர பிரிவு மக்கள் எண்ணிக்கை 14 இல் இருந்து 31 சதவீதமாக உயர்ந்துள்ளது. நாட்டு மக்களில் 3 இல் ஒருவர் நடுத்தர பிரிவில் உள்ளனர். இந்த எண்ணிக்கையானது 2047 ஆம் ஆண்டிற்குள் இரட்டிப்பாகும், ஒவ்வொரு மூன்று இந்தியர்களில் இருவர் இந்த பிரிவில் இடம் பெறுவார்கள்.

ரூ.1.25 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வருவாய் ஈட்டுபவர்களில் 10 இல் 5 பேர் கார் வைத்துள்ளனர். ரூ.5 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை வருவாய் ஈட்டுபவர்களில் 10 இல் 3 குடும்பத்தினர் கார் வைத்துள்ளனர். 30 லட்சத்துக்கும் மேல் வருவாய் ஈட்டும் ஒவ்வொருவர் வீட்டில் கார் உள்ளது. “சூப்பர் பணக்காரர்கள்” ஒவ்வொருவர் வீட்டிலும் மூன்று கார்கள் உள்ளன என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.