ஆப்கானிஸ்தான் – 4 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வென்றது ஆஸ்திரேலியா.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று ஆஸ்திரேலியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அணி வீரர்கள் அதிரடியால் ஸ்கோர் 200-க்கு மேல் வரும் என எதிர் பார்க்கப்பட்டது.
ஆப்கானிஸ்தானின் துல்லியமான் பந்து வீச்சால் 20 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக மேக்ஸ்வெல் அரை சதம் அடித்தார். ஆப்கானிஸ்தான் தரப்பில் நவீன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக குர்பாஸ் – கானி ஆடினர். கானி தொடக்க முதலே தடுமாறினார். அவர் 7 பந்துகளில் 2 ரன் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். அடுத்து வந்த இப்ராஹிம் பொறுமையாக விளையாடினார். ஒருபக்கம் அதிரடி காட்டிய குர்பாஷ் 17 பந்தில் 30 ரன்கள் எடுத்தார்.
அதில் 2 பவுண்டரி 2 சிக்சர் அடங்கும். இதனையடுத்து இப்ராஹிம் – குல்பாடின் நைப் ஜோடி பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்தனர். ஒரு கட்டத்தில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற சதவிதத்தில் ஆப்கானிஸ்தான் 66 சதவிதமும் ஆஸ்திரேலியா 34 சதவிதமும் இருந்தது.
இந்நிலையில் 13-வது ஓவரை ஆடம் ஜம்பா வீசினார். முதல் பந்தில் 2 ரன்கள் எடுக்க முயற்சித்த போது குல்பாடின் நைப் ரன் அவுட் ஆனார். 2-வது பந்தில் இப்ராஹிம் 26 ரன்னிலும் 4-வது பந்தில் நஜிப்புல்லா 0 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்த ஓவரில் நபி 1 ரன்னில் அவுட் ஆனார்.
இதனால் ஆட்டம் ஆஸ்திரேலியா பக்கம் திரும்பியது. 14.3 ஓவரில் ஆப்கானிஸ்தான் அணி 103 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அடுத்ததாக ரஷித்கான் -ரசூல் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.
குறிப்பாக ரஷித் கான் 3 சிக்சர்களை விளாசினார். கடைசி ஓவரில் 22 ரன்கள் தேவைப்பட்டது. ரஷித் கானின் அதிரடியில் கடைசி 2 பந்தில் ஆப்கானிஸ்தானுக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. 5-வது பந்தில் 2 ரன்னும் கடைசி பந்தில் பவுண்டரியும் எடுக்கப்பட்டது.
இதனால் ஆஸ்திரேலியா அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி வரை வெற்றிக்கு போராடிய ரஷித் கான் 23 பந்தில் 48 ரன்னில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலியா தரப்பில் சம்பா, ஹசில்வுட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.