யாழில் போலி உறுதி மோசடி வழக்கு: பொலிஸ் புலன் விசாரணைக்கு சிறீகாந்தா கடும் அதிருப்தி.
யாழ்ப்பாணம் மாநகரில் போலி உறுதி மூலம் காணி மோசடி இடம்பெற்றமை தொடர்பான வழக்கில், பொலிஸாரின் புலன் விசாரணைகளுக்கு மூத்த சட்டத்தரணி என். சிறீகாந்தா கடும் அதிருப்தி தெரிவித்தார்.
இதையடுத்து, சந்தேகநபர் தரப்பில் பொலிஸாருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களைப் பரிசீலித்து அறிக்கை சமர்ப்பிக்க யாழ்ப்பாணம் பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் திருமதி நளினி சுபாஸ்கரன் இந்தக் கட்டளையை நேற்று வழங்கினார்.
யாழ்ப்பாணம் மாநகரில் காணி ஒன்று அதன் இறந்துவிட்ட உரிமையாளர்களான தம்பதியின் போலிக் கையொப்பங்கள் மூலம் நிறைவேற்றப்பட்ட உறுதியால் மோசடியாக உரிமை மாற்றம் செய்யப்பட்டது. அது தொடர்பாக யாழ்ப்பாணம் விசேட குற்ற விசாரணைப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.
முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை நடத்திய பொலிஸார், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் வழக்கைத் தொடுத்து சந்தேகநபர் ஒருவரைக் கைதுசெய்து நீதிமன்றில் முற்படுத்தினர்.
பொலிஸாரின் புலன் விசாரணைகள் நிறைவடையாத நிலையில் சந்தேகநபர் கடந்த மூன்று வாரங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் மீண்டும் வழக்கு நீதிமன்றில் நேற்று விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது தமது புலன் விசாரணை தொடர்பான தொடர் அறிக்கையைப் பொலிஸ் தரப்பு தாக்கல் செய்தது. புலன் விசாரணை தொடர்வதால் சந்தேகநபரைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றிடம் பொலிஸார் விண்ணப்பம் செய்தனர்.
மோசடியில் சம்பந்தப்பட்ட ஏனைய சந்தேகநபர்கள் ஏன் இன்னமும் கைது செய்யப்படவில்லை? என்று மன்று கேள்வி எழுப்பியது.
சந்தேகநபர் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி என்.சிறீகாந்தா புலன் விசாரணை தொடர்பில் பொலிஸ் தரப்புக்கு எதிராக சரமாரியான குற்றச்சாட்டுக்களை நீதிமன்றில் முன்வைத்தார்.
“பொலிஸார் நேர்மையான முறையில் செயற்படாமல் இக்காணி மோசடியுடன் சம்பந்தப்பட்ட சில நபர்களை தொடர்ந்து பாதுகாத்து வருகின்றனர். மோசடி உறுதி நிறைவேற்றப்பட்டதில் வெளிப்படையாகவே பங்குபற்றிய பிரசித்த நொத்தாரிசு மற்றும் இரண்டு சாட்சிகள் ஆகியோரின் வாக்குமூலங்களை பதிவு செய்த போதிலும் அவர்களை இதுவரை மன்றில் முற்படுத்தவில்லை.
காணி உரிமையாளர்களான இறந்த தம்பதிகளில் ஒருவரின் கையொப்பத்தை காணி உறுதியில் மோசடியாக இட்டுள்ள முன்னால் பிரபல கல்லூரி அதிபர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
இவர்களை மன்றில் முற்படுத்துமாறு நீதிமன்று ஏற்கனவே அறிவுறுத்தியதற்கு மாறாக பொலிஸார் தொடர்ந்து செயற்படுகின்றனர்.
இது சட்டத்துக்குப் புறம்பானது. ஒன்றில் நேர்மையான முறையில் முழுமையான புலன் விசாரணை செய்யப்படவேண்டும் அல்லது இந்தப் புலன்விசாரணை கைவிடப்படவேண்டும். இதில் எதைச் செய்யப் போகின்றார்கள் என்பதைப் பொலிஸார் நீதிமன்றிக்குத் தெரிவிக்க வேண்டும்” – என்று மூத்த சட்டத்தரணி சிறீகாந்தா சமர்ப்பணம் செய்தார்.
அந்தச் சந்தர்ப்பத்தில் குறுக்கிட்ட பொலிஸ் தரப்பினர், பிரசித்த நொத்தாரிசைத் தேடி அவரின் வீட்டுக்குத் தாம் இரு தடவை சென்றார் என்றும், ஆனால் அவர் அங்கிருக்கவில்லை என்றும், தமது தொலைபேசி அழைப்புக்களை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் மன்றுரைத்தனர்.
இதற்குப் பதிலாக, குறித்த பிரசித்த நொத்தாரிசு சட்டத்தரணி என்ற முறையில் யாழ்ப்பாணம் நீதிமன்றத்துக்குச் சமூகமளித்து வருகின்றார் என்றும், ஏனைய சந்தேகநபர்கள் தொடர்ந்தும் யாழ்ப்பாணத்திலேயே தங்கியுள்ளனர் எனறும் உறுதியாகக் கூறமுடியும் என்று குறிப்பிட்ட சட்டத்தரணி சிறீகாந்தா, “சட்டத்தையும் நீதிமன்றத்தையும் ஏமாற்ற முடியும் என்று நினைக்காதீர்கள். குறித்த சந்தேகநபர்களுக்கு எதிராக உங்கள் விரல்கள் இன்னமும் ஏன் நீட்டப்படவில்லை என்பதற்கான காரணம் எங்களுக்கு நன்றாகத் தெரியும். எல்லாக் குற்றங்களையும் ஒருவரின் தலையில் பொலிஸார் சுமத்தப் பார்க்கின்றனர். இது பலர் சம்பந்தப்பட்ட மோசடி. அனைத்து நபர்களும் நீதிமன்றில் நிறுத்தப்பட வேண்டும். பொதுமக்களின் கவனத்தை இந்த வழக்கு ஈர்த்திருக்கின்றது. இது பாரதூரமான விவகாரம். எனது கட்சிக்காரரான சந்தேகநபர் என்னைக் கேட்டுக் கொண்டிருந்த போதிலும் இன்றும் நான் பிணை கோரவில்லை” என்று சிறீகாந்தா மன்றுரைத்தார்.
சந்தேகநபர் சார்பாக முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்கள் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து கட்டளை ஒன்றை வழங்கிய மேலதிக நீதிவான், வழக்கு நடவடிக்கைகளின் பதிவு யாழ்ப்பாணம் பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்றும், அதன் மீதான அவரின் அறிக்கை அடுத்த தவணை மன்றில் சமர்ப்பிக்கப்படவேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
அந்தச் சந்தர்ப்பத்தில், சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்படுவதைக் கருத்திற்கொண்டு அடுத்த தவணையை இரு வார காலத்துக்குப் பதிலாக ஒருவார காலம் முடிவில் நிச்சயிக்குமாறு மூத்த சட்டத்தரணி சிறீகாந்தா கோரியதைப் பரிசீலித்த மன்று, எதிர்வரும் 11 ஆம் திகதி வழக்கு மீண்டும் எடுத்துக்கொள்ளப்படும் என்று உத்தரவிட்டது.