அரசியல் தீர்வு உறுதி! – நீதி அமைச்சர் திட்டவட்டம்.
“புதிய அரசமைப்பின் ஊடாக அரசியல் தீர்வே தமிழ் மக்களின் பிரதான எதிர்பார்ப்பு. அதை நாம் நிறைவேற்றியே தீருவோம்” என்று நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எம்மைச் சந்திக்கும் சர்வதேச பிரதிநிதிகளும் புதிய அரசமைப்பு தொடர்பிலும், தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பிலும் முக்கியத்துவம் வழங்கிக் கலந்துரையாடி வருகின்றனர். எனவே, இந்தக் கருமத்தில் நாம் முழு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.
ஒரு வருடத்துக்குள் தீர்வுக்கான அனைத்துப் பணிகளும் நிறைவுக்கு வரவேண்டும் என்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எம்மிடம் தெரிவித்துள்ளார்.
அதற்கு முன் கைதிகள் விவகாரம் (தமிழ் அரசியல் கைதிகள்), காணி விவகாரம் தொடர்பில் ஆராய்ந்து அதற்குரிய தீர்வுகளை அரசு வழங்கும். அதன் ஓர் அங்கமாகவே கைதிகள் (தமிழ் அரசியல் கைதிகள்) சிலர் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஏனையோரும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள்.
நல்லாட்சி அரசில் தீர்வு விடயத்துக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமையான ஒத்துழைப்பை வழங்கியது. ஆனால், தற்போது கூட்டமைப்பின் ஒத்துழைப்பு எமக்குக் கிடைக்கவில்லை என்று அர்த்தம் இல்லை. ஒத்துழைப்பு கிடைக்கின்றது. ஆனால், அந்த ஒத்துழைப்பு முழுமையான ஒத்துழைப்பாக இருக்க வேண்டும்.
வடக்கு, கிழக்கில் காணி விவகாரம் தொடர்பில் பல முறைப்பாடுகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எம்மிடம் முன்வைத்துள்ளனர். இவை தொடர்பில் நாம் நேரில் ஆராந்து விரைந்து தீர்வு காண்போம். எந்தத் தரப்பும் பாதிக்காத வகையில் நாம் தீர்மானங்களை எடுப்போம்” – என்றார்.