இங்கிலாந்து அணியின் வெற்றியால், நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணி வெளியேறியது.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் குரூப்1-ல் இன்று சிட்னியில் நடக்கும் கடைசி லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் இங்கிலாந்து-இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி இதுவரை 5 புள்ளிகள் (2 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு முடிவில்லை) பெற்று இருக்கிறது. இன்றைய ஆட்டத்தில் அந்த அணி வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு முன்னேறும். தோல்வி அடைந்தால் ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு முன்னேறும்.
எனவே ஆஸ்திரேலிய ரசிகர்கள் இலங்கை அணி ஜெயிக்க வேண்டும் என நினைப்பர். 20 ஓவர் கிரிக்கெட்டில் 2014-ம் ஆண்டுக்கு பிறகு இலங்கை அணி, இங்கிலாந்தை வீழ்த்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். இந்நிலையில், இந்தப்போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.
இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி அந்த அணி முதலில் களமிறங்கியது. குறிப்பாக தொடக்க ஆட்டக்காரரான பதுன் நிஷாங்கா அதிரடியாக ஆடினார். அவரின் அதிரடியால், இலங்கை அணி பெரியை ஸ்கோரை எட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் 5 சிக்சருடன் 67 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடி ரன்குவிக்க தவறினர். இங்கிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடியது. தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் ஜாஸ் பட்லர் 28 ரன்னும், அலெக்ஸ் ஹேல்ஸ் 47 ரன்னும் எடுத்து அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.
அடுத்து வந்த பென் ஸ்டோக்ஸ் நிதானமாக ஆடினார். ஆனால் அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் இலங்கையின் சுழலில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். எனினும் பொறுப்புடன் விளையாடிய பென் ஸ்டோக்ஸ் 44 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றார்.
இறுதியில் இங்கிலாந்து அணி 19.4 ஓவர்களில் இலக்கை கடந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 2வது அணியாக அரையிறுதிக்குள் நுழைந்தது. இங்கிலாந்து அணி வெற்றிபெற்றதன் காரணமாக நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணி குரூப் சுற்றுடன் வெளியேறியது.