அதிமுக தலைமையில் நாடாளுமன்ற தேர்தலில் மெகா கூட்டணி – எடப்பாடி பழனிசாமி
2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளார் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
அதிமுக 51ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் நாமக்கல் பொம்மை குட்டை மேடு மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக அமைச்சர்கள் தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “அதிமுக கட்சிக்கு துரோகம் செய்தவர்களை தொண்டர்கள் மன்னிக்க கூடாது. அதிமுக ஆட்சிக்கு எதிராக பல சதிகளை செய்தவர்களை மன்னிக்க முடியாது. எத்தனை வழக்குகள் போட்டாலும் அதிமுக கட்சி ஆட்சிக்கு வருவதை யாரும் தடை போட முடியாது. திமுக தலைவர் ஸ்டாலின் ஊடகவியலாளர்களை மிரட்டி கைக்குள் வைத்து உள்ளார் ஆனால் இது அதிமுகவிடம் பலிக்காது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவை படு தோல்வி அடைய செய்வதே நமது வேலை இந்த கழக தொடக்க விழா இதற்கு சாட்சி” என பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாட்டை பொம்மை முதல்வர் ஆள்கிறார். கடந்த 15 மாதங்களில் எந்த திட்டங்களும் தமிழகத்திற்கு கொண்டு வரவில்லை. அதிமுக ஆட்சியில் கோடி கணக்கில் காலத்தால் அழியாத திட்டங்களை வகுத்தோம். வரும் நாடாளுமன்ற தேர்தல் உடன் சட்டமன்ற தேர்தலும் வர இருக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் எந்த நல்ல திட்டங்களும் இல்லை என பொய்யான குற்றச்சாட்டை ஸ்டாலின் கூறி வருகிறார் இதனை வன்மையாக கண்டிக்கிறோம்” என தெரிவித்தார்.
மேலும், “நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என திமுக அரசு கூறிய நிலையில் 18 மாதங்கள் ஆகியும் இன்னும் ரத்து ஆகவில்லை. முதல் கையைழுத்து போட்டு மக்களை ஏமாற்றி விட்டார் ஸ்டாலின். ஏழை எளிய மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு முறையை அதிமுக ஆட்சியில் கொண்டு வந்தோம்.
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது சீர்குலைந்து உள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை போதை பொருள் தாராளமாக கிடைக்கிறது. தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் அவர்களை கேட்டு கொள்கிறேன்” என தெரிவித்தார்.