கொசுக்களை பிடித்து நீதிமன்றத்திற்கு கொண்டுவந்த பிரபல தாதா.. வழக்கு விசாரணையில் பரபரப்பு!
மும்பை சிறையில் உள்ள தாதா ஒருவர் சிறையில் தீவிர கொசு தொல்லை இருப்பதை நிரூபிக்க கொசுக்களை பிடித்து பாட்டிலில் அடைத்து நீதிமன்றத்திற்கு கொண்டு வந்து பரபரப்பை கிளப்பியுள்ளார். மும்பை தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலின் பிரதான குற்றவாளியாக கருதப்படுவர் நிழல் உலக தாதாவுமான தாவூத் இப்ராஹிம். இவரின் நெருங்கிய கூட்டாளியான இஜாஜ் லக்டாவாலா என்பவரை 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மும்பை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அவர் தற்போது மும்பையின் தலோஜா சிறையில் உள்ள நிலையில், மும்பை அமர்வு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். சிறையில் கொசு தொல்லை அதிகம் இருப்பதால், அங்கு கொசுவலை பயன்படுத்த அனுமதி தேவை என அவர் கோரியிருந்தார்.
தான் ஏற்கனவே கொசுவலை பயன்படுத்தி வந்தேன் எனவும், கடந்த மே மாதத்தில் பாதுகாப்பு காரணங்கள் எனக் கூறி கொசுவலைகளை சிறை அலுவலர்கள் எடுத்து சென்று விட்டார்கள் என மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு மீதான விசாரணையில் கடந்த வியாழன் அன்று நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட லகடாவாலா அன்றைய தினம் நீதிபதிகளை ஒரு நிமிடம் ஷாக் ஆக்கிவிட்டார். நீதிபதிகள் முன் ஆஜரான அவர், தன்னிடம் இருந்த பிளாஸ்டிக் பாட்டிலை நீதிபதிகளிடம் காட்டினார். அந்த பாட்டில் முழுவதும் கொசுக்கள் இருந்தன. இத்தனை கொசுக்கள் தினமும் என்னை வாட்டி வதைக்கின்றது. எனவே, கொசு வலை பயன்படுத்த அனுமதி வேண்டும் என்றார்.
இதற்கு சிறைத்துறை அதிகாரிகள் சிறையில் குற்றவாளிகள் தற்கொலை செய்யும் அபாயம் அதிகரித்து வருதால்தான் கொசுவலைக்கு அனுமதிக்கவில்லை என பதில் தெரிவித்தனர். வாதத்தை கேட்டறிந்த நீதிபதிகள், கொசுவலை பயன்படுத்த அனுமதி வழங்க முடியாது. வேண்டுமென்றால் ஓடோமாஸ் போன்ற க்ரீம்களை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றனர். அதேபோல், சிறைசாலையில் கொசுக்களை அழிக்கும் பணியை சிறைத்துறை செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவில் தெரிவித்துள்ளது.