தூர சேவை பஸ்கள் தினமும் இனிச் சோதனை! ஆளுநர் நடவடிக்கை.
ஒவ்வொரு நாளும் தூர சேவையில் ஈடுபடும் பஸ்களின் வழித்தட அனுமதிப்பத்திரத்தை ஏ – 9 வீதியில் பரிசோதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.
வவுனியாவில் நேற்றுமுன்தினம் அதிகாலை இடம்பெற்ற அதிசொகுசு பஸ் விபத்தில் மூவர் உயிரிழந்திருந்தனர். இதையடுத்து இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே ஆளுநர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“விபத்து தொடர்பான அறிக்கையைப் பொலிஸாரிடம் கோரியுள்ளேன். தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வடக்கு மாகாணத் தலைவருடனும் கலந்துரையாடியுள்ளேன். இதன் அடிப்படையில் சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் – கொழும்பு உட்பட ஏனைய தூர இடங்களுக்கு சேவையில் ஈடுபடும் பஸ்கள் அனைத்தையும் வடக்கு மாகாணத்துக்குள் ஓர் இடத்தில் ஒவ்வொரு நாளும் வழித்தட அனுமதியை பரிசோதித்தல், ஏ – 9 பாதையில் ஏதோ ஓர் இடத்தில் பஸ்களை 10 நிமிடங்கள் நிறுத்திச் சாரதிகளைச் சோர்வு தன்மையில் இருந்து நீக்குதல், ஒவ்வொரு மாதக் கடைசியிலும் தூர சேவையில் ஈடுபடும் அனைத்து பஸ்களின் தரப் பரிசோதனையை மேற்கொள்ளல் என்பன முன்னெடுக்கப்படவுள்ளன.
மேலும், வவுனியா – யாழ்ப்பாணம் இடையிலான நேரக் கட்டுப்பாட்டையும் பஸ்களுக்கு விதிக்கவுள்ளோம்” – என்றார்.