அன்று தீர்வைத் தர முன்வராத நிமால் இன்று எமக்குப் புத்திமதி சொல்வதா? – சிறீதரன் தக்க பதிலடி.
“தமிழர்கள் ஆயுத பலத்தோடு நின்று பேசிய போது தீர்வைத் தர முன்வரா நிமால் சிறிபால டி சில்வா இன்று எங்களுக்கு ஆலோசனை கூற வருகின்றார்” – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
“அரசு ஒரு தேர்தலுக்கு செல்லத் தயாராக இல்லை. அவர்கள் அதனை விரும்பவும் இல்லை. அது நடக்கக் கூடாது என்பதற்காகவே முன்னாள் தேர்தல் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தலைமையில் உள்ளூராட்சி சபைகளுக்கான எல்லை நிர்ணயக் குழுவை அரசு நியமித்துள்ளது” – என்றும் சிறீதரன் எம்.பி. சுட்டிக்காட்டினார்.
யாழ்., வடமராட்சி, அல்வாய் வடக்கு வித்தியாசாலையில் நேற்று நடைபெற்ற முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் ஓய்வுபெற்ற வீதி அபிவிருத்தி அதிகார சபை பொறியியலாளருமான வேலுப்பிள்ளை சிவயோகன் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு நினைவுரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார் .
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நிமால் சிறிபால டி சில்வா சொல்லுகின்றார் “தமிழ்க் கட்சிகள் எல்லாம் ஒன்றாக வாருங்கள்” என்று. யார் யார் எங்களுக்கு ஆலோசனை சொல்வதென்று காலம் இல்லாம் போய்விட்டது.
தமிழீழ விடுதலைப்புலிகள் காலத்தில் அரச தரப்பில் இருந்து பேச்சுக்களில் ஜீ.எல் பீரிஸ் மற்றும் நிமால் சிறிபால டி சில்வா ஆகியோர் கலந்துகொண்டனர். இவர் அப்போது முன்வைத்த தீர்வு தான் என்ன? அப்போது எமது தேசியத் தலைவர் பிரபாகரன் மிக்க பலத்தோடு இருந்தபோது பயங்கரவாதிகள் என்றும், நாட்டை பிளவுபடுத்த முயல்கிறார்கள் என்றும் கூறிவிட்டு எமக்கு ஆலோசனை கூற வருகின்றார் நிமால்.
எம்மை நோக்கி எதிரியே எள்ளி நகையாடுகின்ற அளவுக்கு நாங்கள் இருக்கக்கூடாது. நாம் அனைவரும் எமது இன விடுதலைக்காக ஒன்றுபட வேண்டும்.
நாங்கள் இன்னும் ஒரு எல்லையைத் தொடவில்லை .நாங்கள் நீண்டகாலம் பேசுகின்ற எங்கள் அரசியல் உரிமைகளில் ஒரு புள்ளியைக் கூட தொடவில்லை. எங்களால் இன்னும் தொட்டு நிற்க முடியாத ஓர் இனமாக நாங்கள் நிற்கின்றோம்.
வவுனியா மாவட்டத்திலே இவ்வளவு வீதமான காணிகளைக் காணவில்லை, முல்லைத்தீவு மாவட்டத்திலே இவ்வளவு வீதமான காணிகளைக் காணவில்லை, மன்னாரிலே காணவில்லை என்கின்ற செய்திகளைத்தான் நாங்கள் நாளாந்தம் படிக்கின்றோம்.
யாழ்ப்பாணத்திலே பெருமளவான நிலப்பரப்பு இராணுவத்தின் வசமுள்ளது. அங்கே சிங்களக் குடியேற்றம் நடக்கப் போகின்றதா என்றெல்லாம் செய்திகளைத்தான் பார்க்கின்றோம்.
இதேவேளை, பழைய தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தலைமையிலே மீண்டும் ஒரு எல்லை நிர்ணயக் குழு ஒன்றை அரசு நியமித்துள்ளது. உள்ளூராட்சி சபைத் தேர்தல்தான் நடக்கும் என நாங்கள் எதிர்பார்க்கின்றபோது உள்ளூராட்சி சபைகளுக்கான எல்லை நிர்ணயக் குழு ஒன்று நியமிக்கப்படுகின்றது.
அப்படி என்றால் எல்லை நிர்ணயக் குழு அறிக்கை வரும் வரை தேர்தல் நடாத்தப்பட முடியாது என்பதே சட்டம். ஆகவே இது தேர்தலைத் தள்ளிப்போடுவதற்கான ஒரு உத்தியாகும்.
அதேவேளை, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களிலே அபகரிக்கப்படுகின்ற தமிழர்களுடைய நிலங்களைப் பொலனறுவையோடும் அனுராதபுரத்தோடும் சேர்த்து அவற்றை எல்லை நிர்ணயம் செய்து சிங்கள பிரதேசங்களாக அவற்றை மாற்ற அரசு முற்படுகின்றது. அதனூடாக அங்கு சிங்களப் பிரதிநிதிகளை உருவாக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது” – என்றார்.