இலங்கைக்கு ரணில்; தமிழருக்கு சம்பந்தன்! – சிறந்த தலைவர்கள் என்கின்றார் நீதி அமைச்சர்.
“இலங்கையில் ஏற்பட்ட அரசியல் – பொருளாதார நெருக்கடிகளுக்குத் தீர்வு காணக்கூடிய சிறந்த தலைவராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இருப்பது போல் தமிழ் மக்களுக்கும் சிறந்த ஒரு தலைவராகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விளங்குகின்றார்.”
இவ்வாறு நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நாட்டுக்குப் பொருத்தமான சிறந்த ஆளுமை உடைய தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்பதை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் பகிரங்கமாக ஏற்றுக்கொண்டுள்ளார். அதனால்தான் அவரின் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கி வருகின்றது. அவரின் ஜனாதிபதிப் பதவிக் காலத்தில் நாடு மீண்டெழும் என்ற அதீத நம்பிக்கை எம்மிடம் உண்டு.
இதேவேளை, சம்பந்தனின் காலத்தில் தீர்வைத் தாம் வென்றெடுக்க வேண்டும் என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் எண்ணமாகும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எம்முடன் ஒன்றிணைந்து தொடர்ந்து செயற்பட்டால் அவர்களின் எண்ணம் விரைவில் நிறைவேறும்.
அவர்கள் எதிர்க்கட்சியினர் போல் விலகி நின்று செயற்பட்டால் தீர்வு விடயத்தில் நாம் எப்படி அவர்களுடன் ஒன்றிணைந்து பயணிக்க முடியும்?
எதுவாகினும் தேசிய பிரச்சினை உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது பதவிக் காலத்தில் தீர்வுகளை வழங்குவார்” – என்றார்.