களுத்துறை மாவட்ட தமிழ் மீதான அடக்குமுறைகள் தொடர்பில் மனோ கணேசன் நடவடிக்கை.
களுத்துறை கீகனகந்த தோட்டத்தில் காணிகளில் பல்லாண்டுகளாக சுயமாக தேயிலை பயிர் செய்து வாழ்ந்து வந்த தமிழ் மக்களை அக்காணிகளிலிருந்து வெளியேறும்படி, தோட்ட நிர்வாகத்தின் சார்பாக பெருந்தோட்ட அமைச்சு பணித்துள்ளது.
அதேவேளை இதே தோட்டத்தில் காணிகளை கையகப்படுத்தி வாழ்கின்ற பெரும்பான்மை மக்களுக்கு அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த பாரபட்சமான நிலைமையை ஜனநாயக மக்கள் முன்னணி களுத்துறை மாவட்ட அமைப்பாளர் அந்தனி ஜெயசீலன், பாதிக்கப்பட்ட மக்களை அழைத்து வந்து, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனின் நேரடி கவனத்துக்கு கொண்டு வந்தார்.
இதையடுத்து, இந்த பாரபட்சத்தை தடுத்து நிறுத்தும்படி மனோ எம்பி, பெருந்தோட்ட துறை அமைச்சர் ரமேஷ் பத்திரனவிடம் தொலைபேசியில், இந்நாட்டில் தமிழ், சிங்கள மக்களுக்கு இரு வேறு சட்டங்கள் இருக்க இடம் கொடுக்க வேண்டாம் என தெரிவித்ததையடுத்து அதை உடன் நிறுத்துவதாக அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
அதேவேளை, பதுரெலிய ஹெடிகல தோட்டத்தின் ஞானமுத்து தங்கவேலு என்ற தொழிலாளியின் மீது தாக்குதல் நடத்தி, இனவாத கருத்துகளை வெளியிட்ட தோட்டத்தின் காவலர் மற்றும் கண்காணிப்பாளர் மீது உடன் நடவடிக்கை எடுக்கும்படி, பதுரெலிய பொலிஸ் பொறுப்பதிகாரி சீஐ கொலம்பகேயிடம் மனோ கணேசன் பணிப்புரை விடுத்தார்.
இதையடுத்து நாளை சம்பந்தப்பட்டவர்களை பொலிஸ் நிலையத்துக்கு தருவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக பொறுப்பதிகாரி கூறியுள்ளார்.